தேடுதல்

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் மூவேளை செப உரை வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் மூவேளை செப உரை 

திருத்தந்தை-சமுதாயத்தில் எவரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது

காமரூனில் துவங்கியிருக்கும் நாடு தழுவிய கலந்துரையாடல்கள், அனைவருக்கும் நலன்தரும் வகையில், அமைதியான, நீதி மற்றும் நிலைத்த தீர்வுகள் கிடைக்க வழிசெய்யுமாறு செபிப்போம் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

105வது உலக புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் நாள் திருப்பலியை நிறைவேற்றியபின், மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் எப்பொழுது வந்தார்கள் அல்லது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைப் பாராமல், சமுதாயத்தில் எல்லாரும் இணைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நம் கடற்கரைகளிலும், சமுதாயங்களிலும் வந்துசேரும் அனைவரையும் உபசரிக்குமாறு, அத்திருப்பலியில் கலந்துகொண்ட விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, உலகிலுள்ள அனைத்து மறைமாவட்டங்களுடன் இணைந்து சிறப்பிக்கப்படும் இந்த உலக நாளில், சமுதாயத்திலிருந்து எவரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது என்று கூறினார்.

அவர்கள், சிலகாலம் தங்கியிருக்கும் குடிமக்களாக அல்லது, புதிதாக வந்தவர்களாக இருந்தாலும், எவரையும் நாம் விலக்கி வைக்கக் கூடாது என்றுரைத்த திருத்தந்தை, அவ்வுரைக்குப்பின் திறக்கவிருந்த, குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் போன்றோரின் நிலைமையைச் சித்தரிக்கும் சிலை பற்றியும் விளக்கினார்.

காமரூனில் அமைதியான அரசியல் தீர்வுக்கு அழைப்பு

மேலும், இம்மூவேளை செப உரையின் இறுதியில், ஆப்ரிக்க நாடான காமரூனில் அமைதியான அரசியல் தீர்வுகள் கிடைக்க வேண்டுமெனவும் விண்ணப்பித்தார்.

காமரூன் நாட்டில் துவங்கவிருக்கும் நாடு தழுவிய கலந்துரையாடல்கள், அனைவருக்கும் நலன்தரும் வகையில், அமைதியான வாழ்வுக்கு இட்டுச்செல்லும், நீதி மற்றும் நிலைத்த தீர்வுகள் கிடைக்க வழிசெய்யுமாறு, அந்நாட்டிற்காகச் செபிக்குமாறு, விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேற்கு ஆப்ரிக்க நாடான காமரூனில், செப்டம்பர் 30, இத்திங்களன்று நாடு தழுவிய கலந்துரையாடல்கள் துவங்கியுள்ளன. ஒருவாரம் இடம்பெறும் இந்நடவடிக்கையில், 2016ம் ஆண்டில், அந்நாட்டில், ஆங்கிலம் பேசும் இரு மாநிலங்களில் துவங்கிய சமுதாய-அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும் வழிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2019, 13:00