தேடுதல்

Vatican News
மொசாம்பிக் அரசியல் கட்சி தலைவர்களுடன் திருத்தந்தை மொசாம்பிக் அரசியல் கட்சி தலைவர்களுடன் திருத்தந்தை  (ANSA)

அமைதியை, தொடர்ந்து பேணி பாதுகாத்து வாருங்கள்

1544ம் ஆண்டில், போர்த்துக்கீசிய மாலுமி Lourenço Marques, மப்புத்தோ பகுதியில் காலடி பதித்தார். அதற்குப் பிறகு அந்நகருக்கு வரத் துவங்கிய போர்த்துக்கீசியர்கள், 400 ஆண்டுகளுக்கு மேலாக மொசாம்பிக்கில் காலனி ஆதிக்கத்தைக் கொண்டிருந்தனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மொசாம்பிக் தலைநகர் மப்புத்தோ, அந்நாட்டில் மக்கள் பெருக்கம் மிகுந்துள்ள துறைமுக நகரமாகும். இந்நகரில் அமைந்துள்ள அழகிய வெண்மணல் கடற்கரையை வைத்து, இது, இந்தியப் பெருங்கடலின் முத்து எனவும் அழைக்கப்படுகின்றது. 1500களில் ஒரு சிறிய மீனவக் கிராமமாக உருவெடுத்த இந்நகர்ப் பகுதியில், 1544ம் ஆண்டில், Lourenço Marques எனப்படும் போர்த்துக்கீசிய மாலுமி, காலடி பதித்தார். அதற்குப் பிறகு அந்நகருக்கு வரத் துவங்கிய போர்த்துக்கீசியர்கள், 1781ம் ஆண்டில், துறைமுகத்தை உருவாக்கினர். அதுவே, படிப்படியாக வளர்ந்து, 1877ம் ஆண்டில், நகரமாக மாறியது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 31வது வெளிவாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, இந்நகரில்தான் முதலில் ஆரம்பித்தார். செப்டம்பர் 4, இப்புதன் உள்ளூர் நேரம் மாலை ஆறு மணிக்கு, மப்புத்தோ சென்ற திருத்தந்தை, அடுத்த நாள் வியாழனன்று, முதலில் அரசு, தூதரக மற்றும் பொதுநிலை அமைப்புக்களின், அதிகாரிகளையும் பிரதிநிதிகளையும் சந்தித்தார். 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போரால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மொசாம்பிக்கில், கடினப்பட்டு உருவாக்கப்பட்டுவரும் அமைதியைத் தொடர்ந்து பேணி பாதுகாத்து வாருங்கள் என்று உருக்கமாக திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.  அச்சந்திப்பின் இறுதியில், முன்னாள் புரட்சிக் குழுவான தற்போதைய ரெனாமோ எதிர்க்கட்சித் தலைவர் Ossufo Momade அவர்களையும், மற்றொரு எதிர்க்கட்சித் தலைவர் Daviz Simango அவர்களையும் திருத்தந்தை சந்தித்துப் பேசினார். இந்நிகழ்வுக்குப்பின்,  மொசாம்பிக் கிறிஸ்தவ, முஸ்லிம், இந்து மதங்கள் என, பல்சமயத் தலைவர்களுடன், பல்லாயிரக்கணக்கான மொசாம்பிக் இளையோரைச் சந்தித்தார். ஒப்புரவு என்பதே மையப்படுத்தி அமைந்திருந்த இந்நிகழ்வில், கடவுள் உங்களை அன்புகூர்கிறார் என்ற செய்தியை, மொசாம்பிக் இளையோர்க்கு விட்டுச்செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

06 September 2019, 16:21