தேடுதல்

Vatican News
அருள்பணியாளர், துறவறத்தார் நடுவே திருத்தந்தை அருள்பணியாளர், துறவறத்தார் நடுவே திருத்தந்தை  (AFP or licensors)

எதார்த்தத்தை எதிர்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம்

நம்முடைய உறுதியான “ஆம்” என்ற பதிலுறுப்பு, இறைவனின் மகத்துவத்தை அறிவித்து, நம் மக்களுடைய மனங்கள் நம் மீட்பாராகிய இறைவனிடம் மகிழ்ச்சியடைய செய்யட்டும்

விக்டர்தாஸ் - வத்திக்கான்

அன்புள்ள சகோதர ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், குரு மாணவர்கள், வேதியர்கள், கிறிஸ்தவ சமூகங்களில் உள்ள பணியாளர்கள், மற்றும் அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, மதிய வணக்கம்!

உங்கள் அனைவரின் பெயரால் வரவேற்பு அளித்ததற்காக டோம் ஹிலாரியோவுக்கு நான் நன்றி கூறுகிறேன், உங்கள் அனைவரையும் பாசத்துடனும், மிகுந்த நன்றியுடனும் வாழ்த்துகிறேன். 

நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நமது அழைப்பிற்குரிய பதிலை புதுப்பிக்க விரும்புகிறோம். உங்கள் குறைபாடுகள் மற்றும் பலவீனங்களை உணர்ந்து, நீங்கள் எதிர்கொண்ட கடினமான நேரங்கள் மற்றும் கடுமையான சவால்களை உள்ளடக்கிய உங்கள் சாட்சியங்களுக்கு நன்றி. இது கடவுளின் வியக்க வைக்கும் கருணையை சுட்டிக்காட்டுகிறது. தூய ஆவியார் அவர்கள், உங்களுக்கு தேர்ந்துதெளியும் ஞானம், மன்னிப்பைத் தேடுவதற்கான துணிச்சல், அவருக்கு செவிமடுக்கக் கற்றுக்கொள்வது ஆகியவற்றை எப்போதும் வழங்க வேண்டும் என்று  செபிக்கிறேன்.

அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உண்மை நிலையை எதிர்கொள்ளும்படி அழைக்கப்படுகிறோம். காலங்கள் மாறுகின்றன, புதிய காலக்கட்டங்களில் நம் இடத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது பெரும்பாலும் நமக்குத் தெரியவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

நற்செய்தியை அறிவிப்பதற்குப் பதிலாக, யாரையும் ஈர்க்காத மற்றும் யாருடைய இதயத்திலும் தீயை மூட்டாத மந்தமான செய்தியை நாம் அறிவிக்கிறோம்.

புனித திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நிகழ்வுகளை ஒன்றுபோல் முன்வைத்து, அவைகளின் வேறுபாடுகளை விளக்குகிறார் நற்செய்தியாளர் புனித லூக்கா. இரண்டு அறிவிப்புகளிலும் வானதூதர் தோன்றுகிறார். முதலாவது, யூதேயாவின் மிக முக்கிய நகரமான எருசலேமில், புனித இடமான ஆலயத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது, கலிலேயாவில், தொலைதூர மற்றும் மோதல்கள் நிறைந்த ஒரு சிறிய சாதாரண நகரமான நாசரேத்தில் நடைபெறுகிறது. இந்த மாற்றத்தில், நமது ஆழ்ந்த அடையாளத்தைக் காண்கிறோம். குருத்துவ  அடையாளத்தின் நெருக்கடியில், சில நேரங்களில் நாம் முக்கியமான மற்றும் புனிதமான இடங்களிலிருந்து விலகி, நாம் அழைக்கப்பட்ட இடங்களுக்குத் திரும்ப வேண்டும்.

நமது அன்றாட நடவடிக்கைகளை சில சடங்குகளுடன், கூட்டங்கள் மற்றும் உரையாடல்களுடன், குருக்கள் என அடையாளம் காணப் பழகுகிறோம். எனவே, நாம் மரியாவைப் போலல்லாமல் சக்கரியாவைப் போல் இருக்கிறோம். சக்கரியாவின் சந்தேகங்களும், விளக்கங்களுக்கான அவரின் தேவையும், மரியாவின் “ஆம்” என்பதற்கு முரணானவை. சக்கரியாவைப் போன்று சட்டவல்லுனராக கடவுளுடன் நமது உறவை அனுபவிப்பது ஒரு நிலையான போராட்டமாகும்.

அருள்பணியாளர்களாகிய நமக்கு மக்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது, செய்தி போன்றது அல்ல. நமது மக்களை நாம் அறிவோம், அவர்களின் இதயத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் உணர்கிறோம். நமது அழைப்பைப் புதுப்பிப்பது என்பது, “ஆம்” என்று சொல்வதைத் தேர்ந்தெடுப்பதோடு, கடவுளின் பார்வையில் பலனைத் தரும் செயல்பாடுகளிலும், அவருடைய மகன் இயேசுவை பறைசாற்றுவதிலும் அடங்கியுள்ளது.

 இவ்வுலகம் தரும் மன அழுத்தமும், அவசர வேகமும் நம்மைத் தாக்கி, நாம் இயேசுவின் அழைப்புக்குச் செவிமடுப்பதற்கு தடையாக உள்ளன. இந்த உலகின் சூறாவளி, தெளிவான குறிக்கோள்கள் இல்லாத ஒரு பாதையில் செல்ல உங்களைத் தூண்டக்கூடும், இதனால் உங்கள் பல முயற்சிகள் தடுக்கப்படலாம்.

எலிசபெத் மற்றும் மரியா ஆகிய இரு பெண்களுக்கு இடையிலான சந்திப்பை பதிவு செய்கிறார் நற்செய்தியாளர் லூக்கா. மரியாவைப் போல மற்றவர்களை பார்வையிடவும், திருமுழுக்கில் நாம் பெற்றுக்கொண்ட கடமையான நற்சய்திப்பணியை செய்வதற்கும் மொசாம்பிக் பெண்கள் இன்றும் தேவைப்படுகிறார்கள். உரையாடல் மற்றும் சேவைக்கு பண்பாட்டுமயமாக்குதல் என்பது எப்பொழுதுமே ஒரு சவாலாக இருக்கிறது. ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் பொருத்தமான வகைகளில் அறிவிக்கப்படுகிற நற்செய்தி, அந்த குறிப்பிட்ட கலாச்சாரத்துடன் ஒரு புதிய தொகுப்பை உருவாக்கும். மரியா சொன்ன “ஆம்” என்ற வார்த்தையால் நாசரேத்துக்கும் எருசலேமுக்கும் இடையிலான “தூரம்”  குறைக்கப்பட்டு  மறைந்து விடுகிறது.

மொசாம்பிக்  திருஅவை,  ஒரு “சந்திக்கும் திருஅவையாக” திகழ அழைக்கப்பட்டுள்ளது;  இது மற்றவர்களுக்கு எதிராக சிலரைத் தூண்டும் போட்டி, அவமரியாதை மற்றும் பிளவு ஆகியவற்றின் பிரச்சனையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது, மாறாக தீர்வுகளுக்கான கதவாக மரியாதை, பரிமாற்றம் மற்றும் உரையாடல் இவைகளுக்கு சாத்தியமான ஒரு இடம்.  ஓர் அமைதியான, மற்றும் பன்முக சந்திப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு ஒவ்வொரு புதிய தலைமுறையும் பங்கேற்க வேண்டிய ஒரு தொடர்ச்சியான செயல்முறை தேவைப்படுகிறது.

மரியா, எலிசபெத்தின் வீட்டிற்கு பயணித்ததைப் போலவே, நாமும், ஒரே திருஅவையாக, புதிய பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும். எதிர்ப்பு, பிரிவு மற்றும் கண்டனத்தின் மனநிலையில் முடங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நம்முடைய உறுதியான “ஆம்” என்ற பதிலுறுப்பு, இறைவனின் மகத்துவத்தை அறிவித்து, நம் மக்களுடைய மனங்கள் நம் மீட்பாராகிய இறைவனிடம் மகிழ்ச்சியடைய செய்யட்டும். நம்பிக்கை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தால் உங்கள் அன்பான நாடு மொசாம்பிக் நிரம்பட்டும்.  எனக்காகச் செபிக்க கேட்டுக்கொள்கிறேன். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, தூய கன்னி மரியா உங்களைக் கண்காணிப்பாராக. நன்றி. இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 5, இவ்வியாழன் மாலையில், மப்புத்தோ அமலமரி பேராலயத்தில், மொசாம்பிக் மேய்ப்புப்பணியாளர்களுக்கு உரையாற்றினார்.

06 September 2019, 16:03