தேடுதல்

Vatican News
மொசாம்பிக் அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை மொசாம்பிக் அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை  (ANSA)

மப்புத்தோ அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி, மொசாம்பிக் அரசுத்தலைவரும், எதிரக்கட்சித் தலைவரும், புதிய அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் வழியாக நாட்டின் புதிய பாதைக்கு வழியமைத்துள்ள இவ்விருவரின் துணிச்சலை திருத்தந்தை பாராட்டினார்

மேரி தெரேசா - வத்திக்கான்

இவ்விடத்திற்கு, இவ்வியாழன் காலை 9.40 மணிக்குச் சென்ற திருத்தந்தையை அரசுத்தலைவர் வரவேற்றார். விருந்தினர் புத்தகத்திலும் கையெழுத்திட்டு, அரசுத்தலைவர் Filipe Jacinto Nyusi அவர்களை, தனியே சிறிதுநேரம் தனியே சந்தித்துப் பேசினார். மிக அழகாக, செதுக்கப்பட்டிருந்த மொசாம்பிக் நாடு படம் ஒன்றை, அரசுத்தலைவருக்குப் பரிசாக அளித்தார் திருத்தந்தை. இச்சந்திப்பிற்குப் பின்னர், அந்த மாளிகையிலுள்ள இன்டியாஸ் என்ற பெரிய அறையில், அரசு, தூதரக அதிகாரிகள், மற்றும், பொதுமக்கள் அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திக்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில், அரசுத்தலைவர் Filipe Jacinto Nyusi அவர்கள், திருத்தந்தையை வரவேற்று பேசினார். ‘மத்தேயு 25’ என்ற பிறரன்பு இல்லத்தில் செதுக்கப்பட்ட கல்லறைகல்லையும் திருத்தந்தையிடம் வழங்கினார் அவர். அதன்பின்னர், திருத்தந்தையும், மொசாம்பிக் நாட்டிற்கான தனது முதல் உரையை வழங்கினார். இந்நாட்டில் அமைதி மற்றும் ஒப்புரவுக்கு அழைப்பு விடுத்து, இச்சந்திப்பை நிறைவுசெய்தார் திருத்தந்தை. மொசாம்பிக்கில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில், 30 இலட்சம் முதல் 40 இலட்சம் பேர் வரை புலம்பெயர்ந்தனர். பத்து இலட்சம் பேர் வரை உயிரிழந்தனர். இப்போர் 1992ம் ஆண்டில் முடிவுற்றது. ஆயினும், அவ்வப்போது மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்றன. இறுதியில், இந்த ஆகஸ்ட் 6ம் தேதி, மொசாம்பிக் அரசுத்தலைவரும், எதிரக்கட்சித் தலைவரும் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம், வருகிற அக்டோபர் 15ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற பாதையமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொசாம்பிக் அரசுத்தலைவர் மாளிகையில், அந்நாட்டிற்கான தனது முதல் உரையை நிறைவுசெய்து, அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் சென்று, Maxaquene அரங்கம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். பலவகையான விளையாட்டுகள் நடைபெறும் இவ்வரங்கில், பல்சமய பிரதிநிதிகளுடன் இளையோர் சந்திப்பு நடைபெற்றது.

05 September 2019, 16:04