தேடுதல்

Vatican News
இளையோரால் நிறைந்திருந்த மப்புத்தோவின் Maxaquene அரங்கம் இளையோரால் நிறைந்திருந்த மப்புத்தோவின் Maxaquene அரங்கம்  (ANSA)

Maxaquene அரங்கத்தில் இளையோர் சந்திப்பு

இளையோரின்றி இந்த நிலம் எப்படி இருக்க இயலும்? இளையோரே இந்த மண்ணின் மகிழ்வு, இந்நாளைய மகிழ்வு. இளையோரே நாளை நம்பிக்கை – மப்புத்தோவில் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான்

மப்புத்தோ நகரின் Maxaquene அரங்கத்தில், திருத்தந்தை நடந்துசென்றபோது இளையோரின்  பாடல்களும், குலவைச் சத்தங்களும் துவங்கிவிட்டன. விழா மேடையில் திருத்தந்தையின் அருகில் அந்நாட்டின் இஸ்லாம் மதத் தலைவர் அமர்ந்திருந்தார். மொசாம்பிக்கில், 50 விழுக்காட்டினர் பூர்வீக மதத்தவர், 28 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் மற்றும், 20 விழுக்காட்டினர் இஸ்லாமியர். மேலும், ஆப்ரிக்கர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இந்நாட்டில், இந்தியர்கள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் வாழ்கின்றனர். எனவே, இந்த நிகழ்வு, ஆடல், பாடல் மற்றும் குறு நாடகங்கள் என, பல இனக் கலாச்சாரங்களுடன் நடைபெற்றது. இவற்றில் இளையோர், திருத்தந்தையின் உருவப்படம் பதிக்கப்பட்டிருந்த ஆடைகளை, நீலம், வெண்மை, பச்சை, சிவப்பு போன்ற நிறங்களில் உடுத்தியிருந்தனர். கைகளில் வெண்மைநிற கைக்குட்டைகளை வைத்து ஆடிக்கொண்டிருந்தனர். இந்த அரங்கில் அனைத்து நிகழ்வுகளும், அமைதி, நம்பிக்கை மற்றும், ஒப்புரவு என்ற தலைப்பிலே நடைபெற்றன. பாடகர் குழு பாடிக்கொண்டிருக்கும்போது, நூற்றுக்கணக்கான இளையோர் அழகாக, நடனமாடத் துவங்கினர். பாடலில், இடையிடையே முஸ்லிம், இந்து மற்றும், பூர்வீக மதங்களைச் சார்ந்த இளையோர் தங்கள் மொழியில் சுலோகம் பாடினர். பின்னர், கிறிஸ்தவ அவை குழுவின் சார்பில் ஓர் இளைஞர், முஸ்லிம்கள் சார்பில் ஓர் இளைஞர், மொசாம்பிக் மதங்களின் சார்பில் ஒரு குழு என நடனம் மற்றும் குறு நாடகங்களை நிகழ்த்திக்காட்டின. அழகிய இந்திய இளம்பெண்கள், கையில் தீபங்களை ஏந்தி, சமஸ்கிருத மொழியில், அமைதி குறித்த பக்தி பாடலுக்கு நடனம் ஆடினர். இவற்றுக்குப் பின்னர், இளையோர் சார்பில் ஒருவர் உரையாற்றி, பரிசுப்பொருளையும் திருத்தந்தையிடம் வழங்கினார். பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தனது உரையை வழங்கினார். இளையோரே, இம்மண்ணின், இவ்வுலகின் நம்பிக்கை என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை, இவ்வுரையை, இத்தாலியத்திலும், இடையிடையே போர்த்துக்கீசியத்திலும் ஆற்றினார். பலத்த கைதட்டல்கள் இடையிடையே ஒலித்தன. சில இடங்களில் சில கூற்றுக்களை திருத்தந்தை சொல்லச் சொல்ல, இளையோரும் சேர்ந்து சொன்னார்கள். இந்நிகழ்வின் இறுதியிலும் இளையோர் ஆடிப்பாடினர். மொத்தத்தில், இந்த நிகழ்வு, சிந்தனைக்கு விருந்தாக அமைந்தது. பின்னர், மப்புத்தோ திருப்பீட தூதரகம் சென்று, மதிய உணவருந்தி ஓய்வும் எடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வியாழன் மாலை நிகழ்வுகள்

செப்டம்பர் 05, இவ்வியாழன் மாலை 3 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம், மாலை 6.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீட தூதரகத்தில், XAI-XAI நகரின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். மொசாம்பிக் நாட்டின் தெற்கேயுள்ள Xai-Xai நகரம், 1975ம் ஆண்டு வரை, João Belo என்றை அழைக்கப்பட்டது, இந்நகரில் 1,43,000 மக்கள் வாழ்கின்றனர். தேசிய மற்றும் பன்னாட்டு சுற்றுலாத் தளமாக திகழும் இந்நகரம், மப்புத்தோ நகருக்கு, 224 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. Xai-Xai நகரக் குழுவினரைச் சந்தித்த பின்னர், திருப்பீடத் தூதரகத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அமலமரி பேராலயத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை. அப்பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், குருத்துவ பயிற்சி மாணவர்கள், வேதியர்கள் மற்றும், பொதுநிலைக் கத்தோலிக்கத் தலைவர்களைச் சந்தித்து உரையாற்றினார். பின்னர், ‘மத்தேயு 25’ எனப்படும் பிறரன்பு இல்லத்திற்குச் செல்லல், இவ்வியாழன் பயணத்திட்டத்தின் இறுதி நிகழ்வாகும். இந்த முதல் நாள் நிகழ்வுகளில், மொசாம்பிக் நாட்டில் அமைதி மற்றும் ஒப்புரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். உலகின் வறிய நாடுகளில் ஒன்றான மொசாம்பிக் மக்களுக்கு மிகவும் தேவைப்படுவதும் இவையிரண்டுமே. மப்புத்தோவில், செப்டம்பர் 6, இவ்வெள்ளி பகல் 12.30 மணியளவில் பயண நிகழ்வுகளை நிறைவு செய்து, மடகாஸ்கர் நாட்டிற்குப் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

05 September 2019, 16:10