தேடுதல்

Vatican News
மொரீஷியஸ் நாட்டில் பல்வேறு மதத்தவர், இனத்தவர் மற்றும், மொழியினருக்கு திருத்தந்தை உரை மொரீஷியஸ் நாட்டில் பல்வேறு மதத்தவர், இனத்தவர் மற்றும், மொழியினருக்கு திருத்தந்தை உரை  (Vatican Media)

சந்திப்புக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் முன்னணியில் நில்லுங்கள்

மொரீஷியஸ் நாட்டில் பல்வேறு மதத்தவர், இனத்தவர் மற்றும், மொழியினர் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதை திருத்தந்தை பாராட்டியுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உங்கள் குடியரசுக்கு என்னை அழைத்ததற்கும், பிரதமர் அவர்கள் கூறிய பாசமான வார்த்தைகளுக்கும், அவரும் அரசுத்தலைவரும் கொடுத்த வரவேற்பிற்கும் இதயம்கனிந்த நன்றி. உங்கள் நாட்டில், பொதுவான திட்டத்தின் கண்ணோட்டத்தில், பல்வேறு கலாச்சார, இன மற்றும், மதத்தவர் நல்லிணக்கத்துடன் வாழ்வது, பல்வேறு கண்டங்கள், கலாச்சாரங்கள், மற்றும் மதங்களிலிருந்து இங்கு வந்து குடியேறிய உங்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றது. பன்முகத்தன்மை, அழகானது என்ற உறுதிப்பாட்டிலும், ஒப்புரவுப் பாதை மற்றும், ஒப்புரவாக்கப்பட்ட பன்மைத்தன்மையின் விளைவாகப் பிறக்கும் கலாச்சார இணக்கத்திலும், தொடர்ந்து பயணிக்கையில், நிலையான அமைதி இயலக்கூடியதே என்பதை நினைவுபடுத்துகின்றது. உங்கள் மக்களின் மரபணு, உங்கள் மூதாதையர் இந்த தீவுக்கு குடியேறிய நிகழ்வுகளைப் பாதுகாக்கின்றது. சந்திப்பின் உண்மையான கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் முன்னணியில் நில்லுங்கள். அது, புலம்பெயர்வோரை, அவர்களின் மாண்பிலும், உரிமைகளிலும் மதிக்கச் செய்யும்.

உங்கள் மக்களின் அண்மைக்கால வரலாற்றை நினைவுக்குக் கொணர்கையில், நீங்கள் சுதந்திரம் அடைந்ததிலிருந்து, வேரூன்றத் தொடங்கிய சனநாயக மரபுக்குத் தலைவணங்குகிறேன். இது, மொரீஷியசை அமைதியின் புகலிடமாக அமைப்பதற்கும் உதவியுள்ளது. சனநாயகத்தில் வாழும் இந்தக் கலை, அனைத்துப் பாகுபாடுகளையும் எதிர்த்து, பேணி வளர்க்கப்படும் என நம்புகிறேன். உங்களின் நடத்தை, மற்றும், மனஉறுதியால், எல்லாவிதமான ஊழலை எதிர்க்கவும், பொது நலனுக்கான சேவையில் உங்களின் மாபெரும் அர்ப்பணத்தை வெளிப்படுத்தவும், உங்கள் குடிமக்கள், உங்களில் வைத்திருக்கிற நம்பிக்கைக்கு எப்போதும் தகுதியுள்ளவர்களாக இருக்கவும் வாழ்த்துகிறேன்.

உங்கள் நாடு, சுதந்திரம் பெற்றதிலிருந்து உறுதியான பொருளாதார வளர்ச்சியை அனுபவித்து வருகிறது. அது உண்மையிலேயே அகமகிழ வேண்டியதொன்றாகும். அதேநேரம், இது ஆபத்தான சூழலுக்குச் சென்றுவிடாமல் இருப்பதில் கவனம் தேவை. இக்காலச் சூழலில், பொருளாதார இலாபம், எல்லாருக்கும் பயனளிப்பதுபோல் தெரியவில்லை. இதனாலே, மக்களை மையப்படுத்தி பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குங்கள் என ஊக்கப்படுத்துகிறேன்.

மொரீஷியசில் பல்வேறு மதத்தினர் ஒன்றிணைந்து வாழ்வதை உண்மையிலேயே பாராட்டுகிறேன். இந்நாட்டுக் கத்தோலிக்கர் பலனுள்ள உரையாடலில் எப்போதும் ஆவல்கொண்டிருப்பதைத் தொடருமாறு கேட்கிறேன். உங்களின் சாட்சிய வாழ்வுக்கு நன்றி. உங்கள் எல்லாரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக. அன்பும், இரக்கமும் உங்களை எப்போதும் தொடர்ந்து பாதுகாப்பனவாக.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மொரீஷியஸ் அரசு, தூதரக, சமுதாய மற்றும் பல்சமயத் தலைவர்கள் சந்திப்பில் இவ்வாறு உரையாற்றினார்.

09 September 2019, 16:20