தேடுதல்

Vatican News
மடகாஸ்கர் நாட்டிற்கு திருத்தந்தையின் முதல் உரை மடகாஸ்கர் நாட்டிற்கு திருத்தந்தையின் முதல் உரை 

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை ஊக்குவியுங்கள்

பூமியின் பொருள்களின் பொதுவான இலக்கிற்குரிய உரிமையை மதிக்கும் திறன்கொண்ட ஒரு சமூக நீதியை அடையாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, பயனுள்ள முயற்சிகள் இருக்க முடியாது.

விக்டர்தாஸ் - வத்திக்கான்

உங்கள் அரசியலமைப்பின் முன்னுரையில், மடகாஸ்கர் கலாச்சாரத்தின் அடிப்படை விழுமியங்களில் ஒன்றான ஃபிஹவானானா (fihavanana) என்ற சொல்லை நீங்கள் பொறித்துள்ளீர்கள். இது பகிர்வு, ஒருவருக்கொருவர் உதவி, ஒற்றுமை ஆகியவற்றின் உணர்வைத் தூண்டும் ஒரு சொல். இது குடும்பம், நட்பு, மற்றும், மக்களிடையேயும் இயற்கையுடனும் கொண்டிருக்கும் நல்லெண்ணம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் தூண்டுகிறது. இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நிலத்தை, அதன் அழகுக்காகவும், அதன் விலைமதிப்பற்ற இயற்கை வளங்களுக்காகவும் நாம் அங்கீகரிக்க வேண்டும், மதிக்க வேண்டும், பாராட்ட வேண்டும்.

ஒரு நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சி

உங்கள் நாடு, தன் சுதந்திரத்தை மீட்டெடுத்ததிலிருந்து, ஒரு பயனுள்ள சனநாயகத்திற்கு மாறியதன் வழியாக, நிலையானதன்மை மற்றும் அமைதியை நிலைநிறுத்த ஆவல்கொண்டது. இது முழு சமூகத்திற்கும் சேவை செய்வதற்கான வழிமுறையாக நடைமுறையில் இருக்கும்போது, “அரசியல் என்பது, மனித சமூகத்தையும் நிறுவனங்களையும் கட்டியெழுப்புவதற்கான ஒரு முக்கிய வழிமுறையாகும்” (உலக அமைதி செய்தி, 1 சனவரி 2019) என்பதை நிரூபிக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும் அனைத்து வகையான ஊழல், மற்றும் தவறான ஊகங்களுக்கு எதிராக வலிமையுடனும் உறுதியுடனும் போராடவும், மனிதாபிமானமற்ற வறுமையை உருவாக்கும் உறுதியற்ற தன்மை மற்றும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளவும் நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நமது பொதுவான இல்லமாகிய பூமி மீது அக்கறை காட்டாமல் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பற்றி பேச முடியாது என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சமூக நீதி

மடகாஸ்கர் தீவு, தாவர மற்றும் விலங்குகளின் பல்லுயிர் பெருக்கத்தால் நிறைந்துள்ளது, ஆயினும், இந்த பெருமை,  குறிப்பாக, அதிகப்படியான காட்டழிப்பால் அச்சுறுத்தப்படுகிறது. அந்த பல்லுயிரியலின் சீரழிவு பொதுவான இல்லமாகிய பூமியின் எதிர்காலத்திற்கு ஊறு விளைவிக்கிறது. எனவே, பூமியின் பொருட்களின் பொதுவான இலக்கிற்குரிய உரிமையை மதிக்கும் திறன்கொண்ட ஒரு சமூக நீதியை அடையாமல், உண்மையான சுற்றுச்சூழல் அணுகுமுறை, அல்லது, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பயனுள்ள முயற்சிகள் இருக்க முடியாது.

அருளாளரின் எடுத்துக்காட்டு

ஒரு திருஅவை என்ற முறையில், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், தனது திருத்தூதுப்பயணத்தின்போது அருளாளர் நிலைக்கு உயர்த்திய உங்கள் சக குடிமகளான, அருளாளர் விக்ட்டுவா ராசோமனரிவோவின் அணுகுமுறையை நாம் பின்பற்ற விரும்புகிறோம். இந்த நிலம் மற்றும் அதன் மரபுகள் மீதான அவரின் அன்பின் சாட்சி, இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பதன் அடையாளமாக, ஏழைகளுக்கு அவர் செய்த சேவை, இவைகளை நாமும் தொடர்வதற்கான பாதையை நமக்குக் காட்டுகிறது.

ஏனைய கிறிஸ்தவ சபையினருடனும், பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களுடனும், சமூகத்தின் அனைத்து அங்கத்தினர்களுடனும் தொடர்ந்து உரையாடலில் பங்கேற்று, எப்போதும் ஃபிஹவானாவை மதிக்கும் ஒரு உண்மையான சகோதரத்துவத்தின் விடியலை நோக்கி நடைபோடும், இந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவையின் விருப்பத்தையும், தயார்நிலையையும் மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன். யாரையும் விலக்கி வைக்காத ஓர் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க இதன் வழியாக இயலும்.

இவ்வாறு, திருத்தந்தை, மடகாஸ்கர் நாட்டு அரசு, தூதரக அதிகாரிகள், மற்றும், பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கு உரையாற்றினார்.

07 September 2019, 14:49