தேடுதல்

Vatican News
மடகாஸ்கரில் வந்திறங்கிய திருத்தந்தை, அரசுத்தலைவருடன் மடகாஸ்கரில் வந்திறங்கிய திருத்தந்தை, அரசுத்தலைவருடன்  (ANSA)

மடகாஸ்கர் தலைநகரில் வரவேற்பு

ஆந்தனனரிவோ நகரத் தெருக்களிலும், நகரின் முக்கிய வளைவுகளிலும், ‘Tonga soa’ என்று எழுதப்பட்ட வரவேற்பு விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

மேரி தெரேசா - வத்திக்கான்

மொசாம்பிக், மடகாஸ்கர், மொரீஷியஸ் ஆகிய மூன்று, இந்தியப் பெருங்கடல் பகுதி ஆப்ரிக்க நாடுகளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 4, இப்புதனன்று  தனது 31வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை தொடங்கினார். முதலில் மொசாம்பிக் நாட்டுத் தலைநகர் மப்புத்தோவில் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை ஆரம்பித்த திருத்தந்தை, அமைதி, நம்பிக்கை மற்றும், ஒப்புரவுக்கு அழைப்பு விடுத்தார். சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில் துன்புறும் வறியோர்க்கு ஆற்றும் பணிக்கு, ஆண்டவர் வெகுமதியளிப்பார் என்று, அந்தப் பணியாளர்களை ஊக்குவித்தார்.  அமைதியான வருங்காலத்தைச் சமைப்பதில் நம்பிக்கையை மட்டும் இழந்துவிடாதீர்கள் என்று மொசாம்பிக் மக்களுக்கு அழைப்பு விடுத்து, செப்டம்பர் 6, இவ்வெள்ளி நண்பகலில் மடகாஸ்கர் நாட்டிற்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். விமானத்திலேயே மதிய உணவை முடித்த திருத்தந்தை, 1,725 கிலோ மீட்டர் தூரத்தை, 2 மணி 50 நிமிடங்கள் பயணம் செய்து, மடகாஸ்கர் தலைநகர், ஆந்தனனரிவோ (Antananarivo) நகரை அடைந்தபோது உள்ளூர் நேரம் ஏறத்தாழ மாலை நான்கு மணியாக இருந்தது. விமானத்தளத்தில், அந்நாட்டு மரபில் வரவேற்புகள் வழங்கப்பட்டன. அரசுத்தலைவர் Andry Rajoelina அவர்கள், துணைவியார் Mialy Rajoelina அவர்களுடன் திருத்தந்தையை விமானத்தளத்தில் கைகுலுக்கி வரவேற்றார். இரு சிறார் மரபு ஆடைகளில், திருத்தந்தைக்கு மலர்கள் கொடுத்து வரவேற்றனர். அரசுப் பிரதிநிதிகளும், பல ஆயர்களும் ஏறத்தாழ 300 விசுவாசிகளும் அங்கு நின்று திருத்தந்தைக்கு வரவேற்பளித்தனர். சுற்றி நின்ற மக்கள் கூட்டம், கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. நாட்டுக்கொடிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அரசு மரியாதையுடன் வரவேற்பும் வழங்கப்பட்டது. இதற்குப் பின், அங்கிருந்து 13.4 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருப்பீடத் தூதரகத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். வழியெங்கும் திரளான மக்கள் இருபக்கங்களிலும் நின்றுகொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் எனப் பாடிக்கொண்டிருந்தனர். மலகாசி மொழியில், வருக வருக எனப் பொருள்படும்  ‘Tonga soa’ என்று எழுதப்பட்ட விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. நகரின் முக்கிய வளைவுகளிலும், பெரிய விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றிற்கு இரு பக்கங்களிலும், அமைதி மற்றும் நம்பிக்கையை விதைப்பவர் என்ற இத்திருத்தூதுப் பயணத்தின் இலச்சினையோடு, திருத்தந்தையின் படமும், வத்திக்கான் மற்றும், மடகாஸ்கர் நாடுகளின் கொடிகளும் நாட்டப்பட்டிருந்தன. திருப்பீட தூதரகத்திற்கு சிறிது தூரத்தில் திறந்த காரில் சென்ற திருத்தந்தையை மக்கள் கண்டு மகிழ்ந்தனர். அத்தூதரகத்தில் ஐம்பது சிறார் பாடகர் குழு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பாராட்டிப் பாடியது. அந்த இல்லத்தில் இரவு உணவருந்தி உறங்கச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இவ்வெள்ளி நிகழ்வுகள் முற்றுப்பெற்றன.

07 September 2019, 15:25