தேடுதல்

Vatican News
'மனித உடன்பிறந்த நிலை' ஆவணத்தின் இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட  குழுவுடன் திருத்தந்தை 'மனித உடன்பிறந்த நிலை' ஆவணத்தின் இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட குழுவுடன் திருத்தந்தை  (ANSA)

“மனித உடன்பிறந்த நிலை” ஆவணத்தை அமல்படுத்தும் குழு சந்திப்பு

நியு யார்க் இரட்டைக் கோபுரம், பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான 18 ஆண்டுகள் நிறைவுற்ற இப்புதனன்று, மனித உடன்பிறந்த நிலையை ஊக்குவிப்பதற்கு, திருப்பீடம் மற்றும், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த ஏழு பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்– வத்திக்கான்

“உலக அமைதிக்கும், ஒன்றிணைந்து வாழ்வதற்கும், மனித உடன்பிறந்த நிலை” என்ற வரலாற்று சிறப்புமிக்க ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள இலக்குகளைச் செயல்படுத்துவது குறித்த உயர்மட்ட குழுவின் உறுப்பினர்களை, செப்டம்பர் 11, இப்புதனன்று, வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு பிப்ரவரியில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தில், அபு தாபியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், எகிப்தின் Al-Azhar பல்கலைக்கழகத்தின் தலைமை முஸ்லிம் குரு பேராசிரியர் Sheikh Ahmed el-Tayeb அவர்களும் இணைந்து வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.

நியு யார்க் இரட்டைக் கோபுரம், பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான 18 ஆண்டுகள் நிறைவுற்ற இப்புதனன்று, மனித உடன்பிறந்த நிலை என்ற இந்த ஆவணத்தின் இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்கென, திருப்பீடம் மற்றும், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த ஏழு பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாகக் கூடியுள்ள அக்குழுவை, இப்புதன் காலை 8.30 மணியளவில், சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித உடன்பிறந்தநிலையை வளர்க்கும் இந்தக் குழுவின் ஒவ்வொருவரையும் வாழ்த்தி, இந்த ஆவணத்தின் பிரதிகளையும் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

இந்த சந்திப்பு பற்றி அறிக்கை வெளியிட்ட, திருப்பீட தகவல் தொடர்பகம், இக்குழு உருவாக்கப்படுவதற்கு, செப்டம்பர் 11ம் தேதியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளது.

அந்த நாளில், மரணம் மற்றும், அழிவு விதைகள் விதைக்கப்பட்டது, இந்தக் குழு, வாழ்வையும், மனித உடன்பிறந்தநிலையையும் உருவாக்க முயற்சிக்கும் என்றும், திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

இக்குழுவின் அடுத்த கூட்டம், நியு யார்க்கில், செப்டம்பர் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12 September 2019, 15:46