தேடுதல்

Vatican News
மடகாஸ்கர் மடகாஸ்கர்  (ANSA)

மடகாஸ்கர் தலைநகர் Antananarivo

1897ம் ஆண்டில் பிரெஞ்ச் நாட்டவர், மடகாஸ்கர் தீவு நாட்டை, தங்களின் காலனியாக மாற்றிய பின்னர், Antananarivo நகரம் மடகாஸ்கரின் தலைநகரமாக மாறியது

மேரி தெரேசா - வத்திக்கான்

மடகாஸ்கர் தலைநகர் Antananarivo என்றால், “ஆயிரத்தின் நகரம்” என்று பொருள். Tanan என்றால், நகரம் என்றும், (a)rivo என்றால், ஆயிரம் என்றும் பொருள். Antananarivo நகரம், மலகாசி மொழியில், நீல வனம் எனப் பொருள்படும் Analamang நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. 1610ம் ஆண்டுக்கும், 1625ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், அப்பகுதியில் குடியேறிய Merina இனத்தவரின் அரசர் Andrianjaka என்பவர், ஆயிரம் பாதுகாப்புப் படைவீரர்களை அமர்த்தி, அந்நகரைக் கைப்பற்றினார். அதன் பின்னர், அந்நகரை தனது தலைநகராக அறிவித்த அரசர் Andrianjaka, கோட்டைச் சுவர்கள் அமைத்து, தான் தங்குவதற்கு, அரண்மனையைக் கட்டினார். அப்படியே தனது அரச மாளிகைகளையும் அவர் விரிவாக்கினார். அவையே மெரினா இன அரசின் மாளிகைகளாக மாறின. இந்தப் பகுதி, இதற்கு 50 ஆண்டுகளுக்குப் பின்னர், அரசர் Andrianjakaவின் ஆயிரம் படைவீரர்களை மதிக்கும் விதமாக, இவ்விடத்தை Antananarivo, அதாவது “ஆயிரத்தின் நகரம்“ என்று பெயரிட்டார் அரசர் Andriamasinavalona . மடகாஸ்கர் மக்கள்,  இந்நகரை, “Tana“ என்றே பாசத்துடன் அழைக்கின்றனர். 1897ம் ஆண்டில் பிரெஞ்ச் நாட்டவர், மடகாஸ்கர் தீவு நாட்டை, தங்களின் காலனியாக மாற்றிய பின்னர், இந்நகரம் மடகாஸ்கரின் தலைநகரமாக மாறியது. 1960ம் ஆண்டு மடகாஸ்கர் சுதந்திரம் அடைந்த பின்னர், அந்நகரம் மீண்டும் தலைநகராக உறுதிசெய்யப்பட்டது. இந்நகரிலுள்ள ரெஜினா மாளிகையுள்ள ரோவா என்ற இடம், அந்நகரின் குன்றின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, முதல் உலகப்போரில் இறந்தவர்களின் நினைவாக பிரான்ஸ் நாடு, நினைவிடத்தை அமைத்துள்ளது. மேலும், இந்த பழமையான கட்டடத்தின் ஒருபுறம், ஒரு கத்தோலிக்க மற்றும், ஓர் ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை பேராலயங்களும் உள்ளன. Antananarivo நகரில், ஏறத்தாய 50 ஆலயங்களும், ஒரு மசூதியும் உள்ளன.  

07 September 2019, 15:39