தேடுதல்

மரியா-குழந்தை இயேசு திருவுருவத்தின் முன் திருத்தந்தை பிரான்சிஸ் மரியா-குழந்தை இயேசு திருவுருவத்தின் முன் திருத்தந்தை பிரான்சிஸ் 

புனிதர்களாக வாழ அன்னை மரியாவின் உதவியை இறைஞ்சுவோம்

நாம் விசுவாச வாழ்வில் ஆழப்படவும், புனிதர்களாக வாழவுமென, அனைத்திற்கும் அன்னை மரியாவின் உதவியை நாடுவோம் - திருத்தந்தை

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

“உறுதியான, மகிழ்வுநிறைந்த மற்றும், இரக்கமுள்ள விசுவாசத்தைக் கொண்டிருப்பதற்கு,  அன்னை மரியாவின் பாதுகாப்பையும், ஆதரவையும் இறைஞ்சுவோம், அதன்வழியாக, நாம் புனிதர்களாக வாழவும், ஒருநாள், பேரின்ப பெருவாழ்வில் தம்மைச் சந்திக்கவும், அன்னை மரியா நமக்கு உதவிபுரிவார்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறியுள்ளார். 

ஆகஸ்ட் 15, இவ்வியாழனன்று மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவைச் சிறப்பித்து மகிழ்ந்திருக்கும் இவ்வேளையில், இவ்வுலகில், நாம் விசுவாச வாழ்வில் ஆழப்படவும், புனிதர்களாக வாழவுமென, அனைத்திற்கும் அன்னை மரியாவின் உதவியை நாடுவோம் என, ஆகஸ்ட் 16, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில்,பதிவு செய்திருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஆகஸ்ட் 16, இவ்வெள்ளியன்று, கர்தினால் Seán Baptist Brady அவர்கள், எண்பது வயதை நிறைவுசெய்ததையடுத்து, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை, 216 ஆகவும், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய, எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆகவும் மாறியுள்ளன என, திருப்பீடம் அறிவித்துள்ளது. 

1939ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி பிறந்த அயர்லாந்து நாட்டு கர்தினால் Seán Baptist Brady அவர்கள், 2007ம் ஆண்டில், கர்தினாலாக உயர்த்தப்பட்டார். இவர், 1996ம் ஆண்டு முதல், 2014ம் ஆண்டு வரை, அனைத்து அயர்லாந்து திருஅவையின் தலைவராகவும், அர்மாக் பேராயராகவும் பணியாற்றினார்.

கர்தினால்கள் விவரம்

திருஅவையில், 1973ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி நடைபெற்ற இரகசிய கர்தினால்கள் அவையில், புதிதாக ஒரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய கர்தினால்களின் எண்ணிக்கையை 120 ஆக வரையறுத்தார், புனித திருத்தந்தை 6ம் பவுல். இதை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களும் உறுதிசெய்தார். ஆயினும் இவ்வெண்ணிக்கை இருமுறை மாறி, அது 135 ஆக உயர்ந்தது.

பின்னர், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், மீண்டும், அவ்வெண்ணிக்கையை 120 என உறுதிசெய்திருந்தாலும், அதுவும் இருமுறை மாறி, 125 வரை உயர்ந்தது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி கர்தினால்கள் அவையில், இந்த எண்ணிக்கையை 122 ஆகவும், 2015ம் ஆண்டில் 125 ஆகவும் உயர்த்தினார். இவர், 2016ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி, கர்தினால்கள் அவையில் 17 புதிய கர்தினால்களை இணைத்தவேளை, மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 228 ஆகவும், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய கர்தினால்களின் எண்ணிக்கை 121 ஆகவும் இருந்தது.

2017ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி நடைபெற்ற கர்தினால்கள் அவையின்போது, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய கர்தினால்களின் எண்ணிக்கை 121 ஆகவே இருந்தது. 2018ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி நடைபெற்ற கர்தினால்கள் அவையின்போது, இவ்வெண்ணிக்கை 125 ஆகவும், மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 227 ஆகவும் இருந்தன. ஆகஸ்ட் 16, இவ்வெள்ளி நிலவரப்படி, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை, 216 ஆகவும், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய, எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆகவும் மாறியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2019, 14:44