தேடுதல்

Vatican News
மொசாம்பிக் நாட்டு அரசுக்கும் RENAMO அமைப்புக்குமிடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் மொசாம்பிக் நாட்டு அரசுக்கும் RENAMO அமைப்புக்குமிடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்   (ANSA)

மொசாம்பிக் திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு அமைதி ஒப்பந்தம்

மொசாம்பிக்கில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில், அந்நாட்டில் ஆறு ஆண்டுகளாக நடந்துவந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், இனிமேல் வன்முறையில் ஈடுபடுவதில்லை எனவும் உறுதி கூறப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்வில், நிலையானவற்றைத் தேடுவதற்கு இறைவனிடம் நாம் மன்றாடுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 08, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்  டுவிட்டர் செய்தியில், “கடந்துபோகும் பொருள்களின் மத்தியில் நாங்கள் சிக்கியிருக்கையில், தந்தையே இறைவா, உண்மையாகவே நிலைத்திருக்கவல்ல, உமது பிரசன்னத்தையும், எம் சகோதரர், சகோதரிகளையும், தேடுவதற்கு எமக்கு உதவியருளும்” என்ற வார்த்தைகள் பதிவாகியிருந்தன.

மொசாம்பிக்கில் அமைதி ஒப்பந்தம்

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற செப்டம்பர் 5ம் தேதி, மொசாம்பிக் நாட்டில் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை துவங்கவுள்ளதைமுன்னிட்டு, அந்நாட்டு அரசுத்தலைவர் Filipe Nyusi அவர்களும், RENAMO அமைப்புத் தலைவர் Ossufo Momade அவர்களும், வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 01, கடந்த  வியாழனன்று, RENAMO அமைப்பின் இராணுவத்தளத்தில்,இவ்விரு தலைவர்களும், கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில், மொசாம்பிக்கில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், இனிமேல் வன்முறையில் ஈடுபடுவதில்லை எனவும் உறுதி கூறப்பட்டது. அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட உடனேயே, RENAMO அமைப்பில் கடைசியாக இருந்த போராளிகள், தங்களின் ஆயுதங்களைச் சமர்ப்பித்தனர்.

இந்த ஒப்பந்தத்தை உறுதிசெய்வதாய், மொசாம்பிக் தலைநகர் மப்புத்தோ அமைதி வளாகத்தில், ஆகஸ்ட் 6, இச்செவ்வாயன்று, இவ்விரு தலைவர்களும் மீண்டும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில், தென்னாப்ரிக்க அரசுத்தலைவர் Cyril Ramaphosa, ருவாண்டா அரசுத்தலைவர் Paul Kagame உள்ளிட்ட, பல்வேறு ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் உரையாற்றிய, Momade அவர்கள், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வன்முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற மனநிலையைப் புதைத்துவிட்டதாக, நாட்டு மக்களுக்கும், உலகுக்கும் அறிவிப்பதாகக் கூறினார்.

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக ஆட்சியிலுள்ள, முன்னாள் மார்க்சீய கெரில்லா அமைப்பான, மொசாம்பிக் விடுதலை அமைப்பும், RENAMO அமைப்பும், அந்நாட்டில் 1977ம் ஆண்டு முதல், 1992ம் ஆண்டு வரை இடம்பெற்ற, இரத்தம் சிந்திய உள்நாட்டுப் போருக்குக் காரணிகளாகும். இப்போரில், ஏறத்தாழ பத்து இலட்சம் பேர் இறந்தனர். (Fides)

08 August 2019, 15:20