தேடுதல்

Vatican News
அருள்பணியாளர்களுடன் திருத்தந்தை அருள்பணியாளர்களுடன் திருத்தந்தை 

புனித மரிய வியான்னி விழாவுக்கு டுவிட்டர் செய்திகள்

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 1929ம் ஆண்டில், புனித ஜான் மரிய வியான்னி அவர்களை, அனைத்து பங்குத்தந்தையரின் பாதுகாவலராக அறிவித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கோபத்தை, அன்பு மற்றும், மன்னிப்பால், வெற்றிகண்டு, கிறிஸ்தவ விசுவாசத்தை, மாறாமனதுடனும், துணிச்சலுடனும் வாழுமாறு, ஆண்டவர் நம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 05, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியில் இவ்வாறு பதிவு செய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பங்குத்தந்தையரின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னி திருவிழாவான, ஆகஸ்ட் 04, இஞ்ஞாயிறன்று,  அருள்பணியாளர்களுக்கென, ஹாஸ்டாக்குகளுடன் இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

ஆர்ஸ் நகர் புனிதரின் திருவிழாவான இன்று, கடவுளுக்கும், இறைமக்கள் சமுதாயத்திற்கும் மறைப்பணியாற்றும் உங்கள் அனைவருக்கும், அருள்பணியாளர் வாழ்வில் மிக அழகான பக்கங்கள் பற்றி, எழுத விரும்புகிறேன் என்ற சொற்களை,  ஹாஸ்டாக்குடன் (#ToMyBrotherPriests), தன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஹாஸ்டாக்குடன் (#ToMyBrotherPriests) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்டுள்ள, இரண்டாவது டுவிட்டர் செய்தியில், அருள்பணியாளர்களே, மகிழ்வோடு உங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளதற்கு நன்றி. தவறியவர்களை வரவேற்று, அவர்களின் காயங்களை அக்கறையோடு கவனித்து, அவர்களுக்கு, எல்லா நேரங்களிலும், கனிவும், பரிவன்பும் காட்டி வருவதற்கு நன்றி என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.  

புனித ஜான் மரிய வியான்னி அவர்கள், இறைபதம் எய்திய 160ம் ஆண்டு நிறைவு, ஆகஸ்ட் 04, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் டார்டில்லி என்ற ஊரில், 1786ம் ஆண்டில் பிறந்த புனித மரிய வியான்னி அவர்கள், 1815ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். ஆர்ஸ் என்ற சிறிய ஊரின் பங்குத்தந்தையாக, மறைப்பணியை ஆரம்பித்த இவர், ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 16 மணி நேரங்கள் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றினார். இந்த அருளடையாளத்தைப் பெறுவதற்கு விசுவாசிகள் எந்த நேரத்தில் வந்தாலும், அயராது அதை நிறைவேற்றினார்.

இப்புனிதர் இறந்த நூறாம் ஆண்டு நினைவாக, 1959ம் ஆண்டில், புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், புனித மரிய வியான்னி அவர்களின் புனித வாழ்வை மையப்படுத்தி, Sacerdotii nostri primordia எனப்படும் திருமடலை வெளியிட்டு, இப்புனிதர், அருள்பணியாளர்களின் புனித வாழ்வுக்கு எடுத்துக்காட்டு என அறிவித்தார்

05 August 2019, 15:01