தேடுதல்

Vatican News
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சாரணர் இயக்க இளையோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சாரணர் இயக்க இளையோருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

கொடுங்கள், அதுவே வாழ்வின் இரகசியம் - திருத்தந்தை

20 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த, 16க்கும், 21 வயதுக்கும் உட்பட்ட ஏறத்தாழ ஐந்தாயிரம் சாரணர் இயக்க உறுப்பினர்கள், ஆகஸ்ட் 3, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானில் திருத்தந்தையை சந்தித்தனர்.

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல், சேவையாற்றுதல், அக்கறை காட்டுதல் போன்றவற்றால், மற்றவருக்கு உங்களையே கொடுங்கள், இதுவே, உங்களுக்கு அகவிடுதலையளிக்கும், மற்றும், உலகை வளப்படுத்தும்  என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயிரக்கணக்கான ஐரோப்பிய இளையோரிடம் கூறினார்.

ஆகஸ்ட் 03, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில், தன்னை சந்தித்த, Euromoot எனப்படும், ஐரோப்பிய சாரணர் இயக்க கூட்டமைப்பின், ஏறத்தாழ ஐந்தாயிரம் உறுப்பினர்களுக்கு உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் (லூக்.6,38)” என்ற இயேசுவின் திருச்சொற்களை மையப்படுத்தி பேசினார்.

இருபது ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த, 16 வயதுக்கும், 21 வயதுக்கும் உட்பட்ட சாரணர் படை உறுப்பினர்கள் மற்றும், வழிநடத்துனர்கள் என, ஏறத்தாழ ஐந்தாயிரம் பேர், ஜூலை 27, சனிக்கிழமை முதல், ஆகஸ்ட் 3, இச்சனிக்கிழமை முடிய, உரோம் நகரில் மாநாடு நடத்தினர். இம்மாநாட்டின் நிறைவாக, அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்தித்து ஆசீர் பெற்றனர்.

ஐரோப்பாவில் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்த தர்சு நகர் பவுல், நோர்சியா நகர் பெனடிக்ட், சிரில், மெத்தோடியஸ், அசிசி நகர் பிரான்சிஸ், சியன்னா கத்ரீன் ஆகிய புனிதர்கள் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை, இப்புனிதர்கள், தங்களின் மாபெரும் கனவுகளை நனவாக்கும் பாதையில், இறைவனில் நம்பிக்கை வைத்து, சவால்களை எதிர்கொண்டனர் என்று கூறினார். நூற்றாண்டுகள் கடந்த பின்னரும், இப்புனிதர்கள் உங்களுக்கும் நன்மை செய்துள்ளனர், அவர்கள், தங்களுக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல், மற்றவருக்குத் தங்கள் வாழ்வையே கையளித்தனர், இந்தக் காரணத்திற்காகவே, கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் என்பதை மையப்படுத்தி உங்களிடம் பேச விழைகிறேன் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்

உங்கள் கரங்களைப் பாருங்கள், அவை கட்டியெழுப்புவதற்கும்,சேவையாற்றுவதற்கும், கொடுப்பதற்குமென படைக்கப்பட்டுள்ளன என்றுரைத்த திருத்தந்தை, கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் என்பது, படைப்பிற்கும் பொருந்தும், நாம் படைப்பை இன்று பராமரித்தால், நாளை, நமக்கென ஓர் இல்லமும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

படைப்பு, ஒரு திறந்த நூல், பிறரைச் சந்திக்கவும், குழு ஒன்றிப்பை உருவாக்கவும் இவ்வுலகில் நாம் இருக்கின்றோம் என்பதை, படைப்பு நமக்குப் போதிக்கின்றது என்று கூறினார், திருத்தந்தை.

நீங்கள் ஒவ்வொருவரும் தனித்துவமிக்கவர்கள், இந்த உலகில் நீங்கள் எதைக் கொடுப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளீர்களோ, அதை வேறு எவராலும் உலகிற்கு அளிக்க முடியாது, நீங்கள் கடவுளின் கண்களுக்கு விலைமதிப்பற்றவர்கள் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள் என்றும், இளையோரிடம் திருத்தந்தை கூறினார்.  

சுதந்திரம் என்பது, தொலைபேசியுடன் அறைக்குள் கதவுகளை மூடிக்கொள்வதோ, அல்லது, எதார்த்தமான வாழ்வுநிலையைவிட்டு தப்பிச் செல்வதோ அல்ல, மாறாக, வாழ்வுப் பாதையில், மற்றவரோடு இணைந்து செல்கையில், படிப்படியாக கிடைப்பதாகும் என்றும், வாழ்வில் ஆரம்பம் என்பது, கொண்டிருப்பது அல்ல, மாறாக, கொடுப்பது என்றும்,  திருத்தந்தை கூறினார்.

புதுப்பிக்கப்பட்ட ஐரோப்பாவிற்கு வாழ்வுதருகின்ற, ஒப்புரவாக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த சமுதாயங்களை, உயிர்த்துடிப்புடன் சமைப்பவர்களாக வாழுங்கள் என்று, இந்த சாரணர் இயக்க இளையோரை, இறுதியில் ஊக்கப்படுத்திய திருத்தந்தை, அவர்களின் பணிகளையும் பாராட்டினார்.

03 August 2019, 15:29