தேடுதல்

Vatican News
காணொளி செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் காணொளி செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

இந்தோனேசிய மறைப்பணி மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி

திருமுழுக்கு பெற்றபோது, நம் சொத்தாகிய தூய ஆவியாரையும், நமக்குள்ளிருக்கும் இயேசுவின் நற்செய்தியையும் பெற்றுக்கொண்டோம்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

தன்னிலே மறைப்பணியாளராக இருக்கின்ற ஒரு கிறிஸ்தவர், தூய ஆவியாரால் உந்தப்பட்டு, தனது திருமுழுக்கு வாழ்வை, சமுதாயத்தில் புளிக்காரமாக வாழ்ந்து, இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கின்றார் என்று, ஒரு மறைப்பணி மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆக்ஸ்ட் 01, இவ்வியாழனன்று, இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் Mercure மையத்தில் தொடங்கியுள்ள, தேசிய மறைப்பணி மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாம் திருமுழுக்கு பெற்றபோது, நம் சொத்தாகிய தூய ஆவியாரையும், நமக்குள்ளிருக்கும் இயேசுவின் நற்செய்தியையும் பெற்றுக்கொண்டோம் என்பதை, இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் கத்தோலிக்கருக்கு நினைவுபடுத்தியுள்ள திருத்தந்தை, திருமுழுக்குப் பெற்றுள்ளவர்கள், அனுப்பப்பட்டுள்ளவர்கள் ஆகிய இரு பதங்களை மையப்படுத்திப் பேசியுள்ளார்.

கிறிஸ்தவர், இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பதில், திருமுழுக்கை, தனது தனிப்பட்ட வாழ்வில் மட்டுமின்றி, சமுதாயத்தில் புளிக்காரமாகவும், எவ்வாறு வாழ்கிறார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவர் முன்னோக்கிச் செல்கையில், அவர் அனுப்பப்பட்டவராகச் செல்கிறார், இதற்கு உந்துசக்தி தூய ஆவியாரே என்று உணருமாறு வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்குப் பெற்றவர்கள், மற்றும், அனுப்பப்பட்டவர்கள் என்ற உணர்வில், துணிச்சலுடன், எப்போதும் முன்னோக்கிச் செல்லுமாறு, மாநாட்டினரை ஊக்கப்படுத்தியுள்ளார்.

"திருமுழுக்கு வழங்கப்பட்டு, அனுப்பப்பட்டவர்கள்" என்ற தலைப்பில், இந்தோனேசிய கத்தோலிக்கத் திருஅவை ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு, ஆகஸ்ட் 4, வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.

02 August 2019, 15:30