தேடுதல்

Vatican News
காணொளிச் செய்தி வழங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் காணொளிச் செய்தி வழங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை: மொசாம்பிக்கில் ஒப்புரவு நிலவ செபியுங்கள்

செப்டம்பர் 4, வருகிற புதனன்று, மொசாம்பிக் நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களுக்கு காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்

மேரி தெரேசா- வத்திக்கான் செய்திகள்

மொசாம்பிக் நாட்டிற்கு தான் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்திற்காகவும், அந்நாட்டில் ஒப்புரவு நிலவவும் இறைவனிடம் மன்றாடுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வருகிற செப்டம்பர் 4ம் தேதி முதல், 6ம் தேதி முடிய, மொசாம்பிக் நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு, அந்நாட்டு மக்களிடம் காணொளிச் செய்தி வழியாகப் பேசியுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் அனைவரையும், குறிப்பாக, துன்பம்நிறைந்த சூழல்களில் வாழ்வோரை, உடன்பிறப்பு அன்பால் அரவணைக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

உங்களனைவரையும் என் செபத்தில் நினைவுகூர்கிறேன், உங்களைச் சந்திப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன் என்று பேசியுள்ள திருத்தந்தை, மொசாம்பிக் நாட்டிற்குத் தன்னை அழைத்த அரசுத்தலைவர் மற்றும், கத்தோலிக்க ஆயர்களுக்கு, நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டில் இடம்பெற்றுவரும் ஒப்புரவு நடவடிக்கைகள் வெற்றிபெற செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, மொசாம்பிக் நாட்டிலும், ஆப்ரிக்கா முழுவதிலும், உறுதியான மற்றும் நிலைத்த அமைதி நிலவ, உடன்பிறப்பு உணர்வுடன்கூடிய ஒப்புரவு அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொசாம்பிக்கில், 1977ம் ஆண்டு முதல், 1992ம் ஆண்டு வரை இடம்பெற்ற உள்நாட்டுப் போரில், பத்து இலட்சத்திற்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். அந்நாட்டில், போர் நிறுத்தம் கையெழுத்திடப்பட்டிருந்தாலும், ஆங்காங்கே வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன என்று செய்திகள் கூறுகின்றன.  

மொசாம்பிக்கில், போரிடும் குழுக்களிடையே அமைதி உரையாடலை நடத்துவதற்கு, கத்தோலிக்க திருஅவை, குறிப்பாக, புனித எஜிதியோ அமைப்பு ஓய்வின்றி உழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

30 August 2019, 15:24