தேடுதல்

ரிமினி நகரில் 40வது நட்புறவு கூட்டம் ரிமினி நகரில் 40வது நட்புறவு கூட்டம்  

ரிமினி நகர் 40வது நட்புறவு கூட்டத்திற்கு திருத்தந்தை செய்தி

போர் மற்றும், வறுமையால் ஒவ்வொரு நாளும் வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்களை நினைத்துப் பார்ப்போம், அவர்கள், வெறும் எண்கள் அல்ல, மாறாக, முகங்களைக் கொண்ட மனிதர்கள்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

மக்களிடையே நட்புறவை வளர்க்கும் நோக்கத்தில், இத்தாலியின் ரிமினி நகரில், ஆகஸ்ட் 18ம் தேதி முதல், 24ம் தேதி வரை நடைபெறும், நாற்பதாவது கூட்டத்திற்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

வாழ்வால் சோர்வடைந்திருக்கும் இக்காலத்திய மக்களுக்கு, ஆண்டவரின் முகத்தைக் காட்டுமாறு அச்செய்தியில் பரிந்துரைக்கும் திருத்தந்தை, அதில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் தன் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இயேசு கல்வாரிக்குச் சிலுவை சுமந்து சென்றபோது, வழியில் புனித வெரோனிக்கா அவரது திருமுகத்தைத் துடைத்த நிகழ்வை வைத்து, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் எழுதிய, “நீ பற்றார்வத்தோடு அவரை நோக்கியதைக் கொண்டு உனது பெயர் பிறந்தது” என்ற கவிதை, இக்கூட்டத்திற்கு தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது என்றுரைக்கும் அச்செய்தி, அத்தலைப்பை மையப்படுத்தியே சிந்தனைகளையும் வழங்கியுள்ளது. வெரோனிக்கா என்பதற்கு, இலத்தீனில், “vera icona” அதாவது “உண்மையான சாயல்” என்று அர்த்தமாகும்.

மத்தேயு நற்செய்தியில், இயேசு சக்கேயுவை உற்றுநோக்கியது பற்றியும் குறிப்பிட்டுள்ள அச்செய்தி, இயேசு இரக்கத்தோடு அவரை நோக்கினார், இதுவரை அவரை எவரும் நோக்கிப் பார்த்திராத முறையில் இயேசு நோக்கினார், அதுவே சக்கேயு தன் இதயத்தை இயேசுவுக்குத் திறக்கச் செய்தது, அதுவே அவருக்கு புதிய வாழ்வையும், நம்பிக்கையையும் அளித்தது என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள செய்தி கூறுகின்றது.

உண்மையான சாயல்

ரிமினி கூட்டம், ஒருவர் மற்றவரின் உண்மையான முகத்தைச் சந்திக்கும் இடமாக அமைய வேண்டும் என்று திருத்தந்தை விரும்புகிறார் என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இயேசு, நம்மை அன்புகூர்ந்து, நமக்காகத் தம் வாழ்வைக் கையளித்தார், நம் ஒவ்வொருவரின் தனித்துவமிக்க மற்றும், மீண்டும் அமைக்க முடியாத சாயலை உறுதி செய்கிறார் என்பதை, இக்கூட்டத்தின் தலைப்பு நினைவுபடுத்துகின்றது என்று சொல்லியுள்ளார்.

வாழ்வால் சோர்ந்துள்ள...

நம் காலத்திய மக்களில் பலர், வாழ்வின் சுமையால் வீழ்ந்துள்ளனர் மற்றும் கைவிடப்பட்டுள்ளனர் என்பதை, இந்த உண்மை நினைவுபடுத்துகின்றது என்றும், போர் மற்றும், வறுமையால் ஒவ்வொரு நாளும் சொந்த இடங்களைவிட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்களை நினைத்துப் பார்ப்போம், அவர்கள், பெயர்கள் மற்றும், வரலாறுகளைக் கொண்டிருப்பவர்கள், அவர்களை ஒருபோதும் மறவாதிருப்போம் என்று கர்தினால் கேட்டுக்கொண்டுள்ளார்.

தங்களையே கண்டுணர...

பலர், தங்களையே மீண்டும் கண்டுணர, ஆண்டவரின் முகத்தை காண வேண்டியுள்ளது, அச்சத்திலும், தன்னையே தனிமைப்படுத்தியும் வாழ்வதைத் தவிர்த்து, இயேசுவின் முகத்தை நோக்கி, நம் கண்களைப் பதிப்போம் என்று, கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

ரிமினி கூட்டம்

மக்கள் மத்தியில் நட்புறவை வளர்க்கும் நோக்கத்தில், ரிமினி நகரில் 1980ம் ஆண்டு முதல் கூட்டம் நடைபெற்றது. 2008ம் ஆண்டு முதல், மக்கள் மத்தியில் நட்புறவை வளர்க்கும் அறக்கட்டளை, இதனை நடத்தி வருகிறது. ஆயினும், இக்கூட்டத்தை நடத்துவதற்கு, உலகின் பல நாடுகளிலிருந்து நான்காயிரம் தன்னார்வலர்கள் உதவிசெய்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் பல்கலைக்கழக மாணவர்கள். கடந்த ஆண்டில் ஏறத்தாழ 8 இலட்சம் பேர் கலந்துகொண்டனர். நொபெல் விருது பெற்றவர்கள், சமயத் தலைவர்கள் உட்பட, பல முக்கிய பிரமுகர்கள் இதில் உரையாற்றுகின்றனர். 1982ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2019, 15:18