தேடுதல்

Vatican News
அமேசான் பகுதி மக்களுக்கு நலவாழ்வுப் பணிகளையும், இறைவார்த்தையையும் வழங்கும், திருத்தந்தை பிரான்சிஸ் மருத்துவமனை கப்பல் அமேசான் பகுதி மக்களுக்கு நலவாழ்வுப் பணிகளையும், இறைவார்த்தையையும் வழங்கும், திருத்தந்தை பிரான்சிஸ் மருத்துவமனை கப்பல் 

அமேசானில் திருத்தந்தை பிரான்சிஸ் மருத்துவமனை கப்பல்

மருத்துவமனை கப்பல், அமேசானில் ஏறத்தாழ ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகளில், உதவி அதிகம் தேவைப்படும் மக்களுக்கு, மருத்துவ சேவைகளை வழங்குவதுடன், இறைவார்த்தையையும் அறிவிக்கும் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பிரேசில் நாட்டின் Belém do Pará உயர்மறைமாவட்டத்தை, ஆகஸ்ட் 17, இச்சனிக்கிழமையன்று வந்தடைந்த, ஒரு புதிய மருத்துவமனை கப்பலுக்கு, தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் மடல் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அனுப்பியுள்ளார்.

அமேசான் பகுதி மக்களுக்கு நலவாழ்வுப் பணிகளையும், இறைவார்த்தையையும் எடுத்துச் செல்லும் ‘திருத்தந்தை பிரான்சிஸ் மருத்துவமனை கப்பல்’, Belém உயர்மறைமாவட்டத்தை வந்து சேர்ந்துள்ளது. ஆறுகள் வழியாக மட்டுமே உதவிகள் பெறக்கூடிய அமேசான் பகுதிகளில், இந்தக் கப்பல் தனது பணியைத் தொடங்கவுள்ளது.

இந்தக் கப்பல் வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட நிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மடலும் வாசிக்கப்பட்டது. இந்த மகிழ்வான நேரத்தில் இறைவனுக்கு நன்றிகூரும் எல்லாருடனும் தானும் இணைவதாக, அதில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை.

இந்த ஆற்று மருத்துவமனை, அமேசான் பகுதிக்கென உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தைக் கண்முன் வைத்து,  ஓர் அழகுநிறைந்த, தெளிவான அடையாளமாகவும், இறையாட்சியை அறிவித்து, நோயாளிகளைக் குணப்படுத்துங்கள் என்ற நம் ஆண்டவரின் கட்டளைக்குப் பதிலளிப்பதாகவும் உள்ளது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த முயற்சிக்கு முக்கிய காரணியாக உள்ள பிரேசில் நாட்டு Óbidos ஆயர் Bernardo Bahlmann அவர்களுக்கும், இறைபராமரிப்பு பிரான்சிஸ்கன் சபையினருக்கும், இம்மடலின் இறுதியில், தனது நன்றியைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

19 August 2019, 15:57