தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஞாயிறு மூவேளை செப உரை - 18/08/19 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஞாயிறு மூவேளை செப உரை - 18/08/19  (ANSA)

திருத்தந்தை - இறையன்பின் தீ, பிறரன்பில் பற்றியெரிகிறது

தங்களின் ஓய்வு நேரங்களை, நோயாளிகள், ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் செலவழிப்பதற்கு பல இளையோர் முன்வருகின்றனர். கடவுள் அன்பின் தீ, நம் அன்பைச் சுத்திகரிக்கிறது - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மற்றவர் மீது அக்கறையின்மையை அகற்றி, அவர்களின் தேவைகளுக்கு நம் இதயங்களைத் திறப்பதற்காகவே, இயேசு, இம்மண்ணுலகில் கடவுள் அன்பின் தீயைக் கொணர்ந்தார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.

ஆகஸ்ட் 18, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில்,  கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் ஒளியில், உறுதியான தீர்மானம் எடுப்பதற்கு நேரம் வந்துள்ளது என, இயேசு தம் சீடர்களுக்குக் கூறும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் (லூக்.12:49-33) பற்றிய சிந்தனைகளை வழங்கினார்.

மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்று, இயேசு தம் சீடர்களிடம் கூறிய இந்நற்செய்திப் பகுதியில், அவர் குறிப்பிட்டுள்ள தீ உருவகத்தைப் போன்று, வாழ்வு பற்றி நாம் எடுக்கும் தீர்மானம் தள்ளிப்போடப்படக் கூடாது என திருத்தந்தை கூறினார்.

கடவுள் அன்பின் தீயை வரவேற்பதற்கு, சோம்பல், அக்கறையின்மை, புறக்கணிப்பு, தனக்குள்ளே முடங்கிப்போதல் போன்ற எண்ணங்களைக் கைவிட வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, நற்செய்திக்கு கிறிஸ்தவர்கள் எவ்வாறு சான்று பகர வேண்டுமென்பதையும் விளக்கினார்.

நற்செய்திக்கு சான்று பகர்தல் என்பது, நன்மையை நல்கும் தீ போன்றது என்றும்,  தனிமனிதர்கள், இனங்கள், மக்கள், மற்றும், நாடுகள் மத்தியில் ஏற்படும் அனைத்துப் பிரிவினைகளையும் விலக்கி வாழ்வதாகும் என்றும் கூறியத் திருத்தந்தை, கடவுள் அன்பின் தீ, எதிலும் தனித்துநின்று வாழ்வதை எரித்து, அனைவருக்கும் பிறரன்புப் பணியாற்ற நம் இதயங்களைத் திறக்க வைக்கும் என்றும் தெரிவித்தார்.   

தங்களின் ஓய்வு நேரங்களை, நோயாளிகள், ஏழைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்டவர்கள் மத்தியில் செலவழிப்பதற்கு பல இளையோர் முன்வருகின்றனர் என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் அன்பின் தீ, நம் அன்பைச் சுத்திகரிக்கிறது என்று கூறினார்.

18 August 2019, 12:44