தேடுதல்

இரஷ்ய இராணுவக் கப்பல்களுடன் நீர்மூழ்கிப் படகு இரஷ்ய இராணுவக் கப்பல்களுடன் நீர்மூழ்கிப் படகு 

நீர்மூழ்கிப் படகில் பலியானவர்களுக்கு திருத்தந்தை அனுதாபம்

இரஷ்ய நீர்மூழ்கிப் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தன் அனுதாபம் கலந்த செபத்தையும், அருகாமையையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இரஷ்ய நாட்டின் நீர்மூழ்கிப் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளார் என்று, திருப்பீடச் செய்தித்துறை தலைவர், அலெஸ்சாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

இரஷ்ய நீர்மூழ்கிப் படகில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறிந்த திருத்தந்தை, துயரம் அடைந்தார் என்றும், இவ்விபத்தில் இறந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தன் அனுதாபம் கலந்த செபத்தையும், அருகாமையையும் தெரிவித்தார் என்றும் ஜிசோத்தி அவர்கள் கூறினார்.

AS-12 Losharik என்றழைக்கப்படும் நீர்மூழ்கிப் படகு, ஜூலை 2, இச்செவ்வாயன்று, Barents கடலில் விபத்துக்குள்ளாகி, படகுக்குள் தீப்பிடித்ததென்றும், படகில் பணியாற்றிய 14 கடற்படை வீரர்களும் இறந்தனர் என்றும், இரஷ்ய எல்லைப் பாதுகாப்புத் துறை அறிவித்தது.

மிக இரகசியமான ஒரு பணியில் ஈடுபட்டிருந்த இந்த நீர்மூழ்கிப் படகு, அணு சக்தியால் இயங்கும் படகு என்றும், இந்த விபத்தால் அந்தக் கடல் பகுதியில் அணுக்கசிவு ஆபத்து உருவாக வாய்ப்புள்ளது என்றும் ஊடகங்கள் கணித்துள்ளன.

2000மாம் ஆண்டு, இரஷ்யாவின் Kursk என்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வெடித்ததில், கப்பலில் பணியாற்றிய 118 பணியாளர்கள் கொல்லப்பட்டனர் என்பதும், அந்த விபத்து நிகழ்ந்த அதே Barents கடலில், தற்போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2019, 14:51