தேடுதல்

Vatican News
ஹவானா பேராலயத்தில் கர்தினால் ஒர்த்தேகாவின் உடல் ஹவானா பேராலயத்தில் கர்தினால் ஒர்த்தேகாவின் உடல் 

கியூப கர்தினால் ஹைமே ஒர்த்தேகா மறைவுக்கு இரங்கல்

கியூபாவிற்கு எதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டு நீண்ட கால பொருளாதாரத் தடை அகற்றப்படுவதற்கு பல வழிகளிலும் முயற்சித்து, அதில் வெற்றியும் கண்டவர், கர்தினால் ஒர்த்தேகா

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கியூபா நாட்டில் ஏழைகளின் நல்வாழ்வுக்காக, நீண்டகாலம் குரல்கொடுத்த, கர்தினால் ஹைமே ஒர்த்தேகா அலமினோ அவர்கள், தனது 82வது வயதில், ஜூலை 26, இவ்வெள்ளியன்று இறைவனடி எய்தினார்.

கர்தினால் ஹைமே ஒர்த்தேகா அவர்களின் மறைவுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெயரால் அனுப்பப்பட்டுள்ள இரங்கல் தந்தியில், கர்தினாலின் ஆன்மா நிறைசாந்தி அடைய திருத்தந்தை செபிக்கின்றார் என்றும், கர்தினால் அவர்கள் ஆற்றியுள்ள பல்வேறு பணிகளுக்கு, திருத்தந்தை பாராட்டு தெரிவித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் ஹவானாவின் பேராயராக, ஏறத்தாழ 35 ஆண்டுகள் பணியாற்றி, 2016ம் ஆண்டில் ஓய்வுபெற்ற, கர்தினால் ஹைமே ஒர்த்தேகா அவர்கள், கியூப கத்தோலிக்கருக்காக, தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும், பரிந்துபேசுபவராக செயல்பட்டார்.

கியூபாவிற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே உறவுகள் மறுபிறப்பு அடையவும், கியூபத் தீவில் கத்தோலிக்கம் உயிர்த்துடிப்பு பெறவும் உழைத்த கர்தினால் ஒர்த்தேகா அவர்கள், அத்தீவு நாட்டில் கத்தோலிக்கர், தங்களின் அயலவர்களுக்கு மறைப்ணியாளர்களாக வாழ்வதற்கு ஊக்குவித்து வந்தவர்.

1966க்கும் 1967ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எட்டு மாதங்கள், கியூப கம்யூனிச அரசின் தொழில் முகாமில் வைக்கப்பட்டவர் இவர். 1998ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால், 2012ம் ஆண்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 2015ம் ஆண்டு செப்டம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகிய மூவரையும் கியூபாவில் வரவேற்றவர், கர்தினால் ஒர்த்தேகா.

கர்தினால் ஒர்த்தேகா அவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இவ்வெள்ளியன்று இறைவனடி சேர்ந்தார்.

கர்தினால் ஹைமே ஒர்த்தேகா அவர்களின் மறைவோடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 217 ஆகவும், இவர்களில் 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆகவும் மாறின.

27 July 2019, 15:42