தேடுதல்

Vatican News
Şumuleu Ciuc அன்னை மரியா திருத்தலத்தில் திருப்பலி Şumuleu Ciuc அன்னை மரியா திருத்தலத்தில் திருப்பலி  (ANSA)

Şumuleu Ciuc அன்னை மரியா திருத்தலத்தில் திருப்பலி

Iasi நகரில், அரசியாம் அன்னை மரியா பேராலயம் செல்தல், கலாச்சார மாளிகை வளாகத்தில் இளையோரை, அவர்கள் குடும்பத்தினருடன் சந்தித்தல் ஆகியவை சனிக்கிழமை மாலை நிகழ்வுகள்

மேரி தெரேசா - வத்திக்கான்

“இறைவனின் அன்னையின் தோட்டம்” என, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் அழைக்கப்பட்ட ருமேனியாவில், இவ்வெள்ளி மாலையும், ஜூன் 01, இச்சனிக்கிழமையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய திருப்பலிகள், அன்னை மரியாவை மையப்படுத்தியே நிகழ்ந்தன. காலநிலை காரணமாக, இச்சனிக்கிழமை காலையில், பயணத் திட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே, புக்காரெஸ்ட் திருப்பீட தூதரகத்திலிருந்து காரில் புறப்பட்ட திருத்தந்தை, Bacauவுக்குச் செல்லாமல், Târgu Mureș நகருக்குச் சென்றார். அந்நகர் விமானத்தளத்தை உள்ளூர் நேரம் காலை 8.20 மணிக்கு, அதாவது, இந்திய-இலங்கை நேரம், இச்சனிக்கிழமை காலை 10.50 மணிக்குச் சென்றடைந்த திருத்தந்தை, அங்கிருந்து காரில், ருமேனியாவில் புகழ்பெற்ற Şumuleu Ciuc அன்னை மரியா திருத்தலம் சென்றார். பலவண்ண, மழை மற்றும் குளிர் ஆடைகளில், அத்திருத்தல வளாகத்தில், பெருமளவான ஹங்கேரி நாட்டவர் உட்பட, ஏறத்தாழ இரண்டு இலட்சம் விசுவாசிகள் அமர்ந்திருந்தனர். ஏனெனில், இத்திருத்தலம் அமைந்துள்ள பகுதியில் ஏறத்தாழ 6 இலட்சம் ஹங்கேரி நாட்டவர் வாழ்கின்றனர். இந்த வளாகத்தில் திறந்த காரில் வந்து, இலத்தீனில் திருப்பலியைத் தொடங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியில், ஹங்கேரி நாட்டு அரசுத்தலைவர் János Áder அவர்கள், ருமேனிய பிரதமர்  Vasilica Viorica Dancila அவர்கள், சுலோவாக்கியா, செர்பியா, மற்றும் உக்ரைன் நாடுகளின் விசுவாசிகளும் கலந்துகொண்டனர். இத்திருப்பலியில்,  திருத்தந்தை மறையுரையும் ஆற்றினார்.

தங்க ரோஜா காணிக்கை

Şumuleu Ciuc அன்னை மரியா திருவுருவத்திற்கு, “தங்க ரோஜா”வைக் காணிக்கையாக அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். செடி போன்ற அமைப்பை உடைய இந்த காணிக்கை, ஏறத்தாழ 84 செ.மீ. நீளமும் 1,200 கிராம் எடையையும் கொண்டது. இதன் காம்பும்,  இலைகளும் வெள்ளியாலும், அடிப்பாகம் பளிங்கினாலும் ஆனவை. இதிலுள்ள ரோஜா மலர்கள் 24 காரட் தங்கத்திலானவை. திருத்தந்தையின் இலச்சினையையும் இச்செடியில் பொறிக்கப்பட்டுள்ளது.

Şumuleu Ciuc அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில், Alba Iulia பேராயர், György-Miklós Jakubínyi அவர்கள், திருத்தந்தைக்கு நன்றியுரையாற்றினார்.

இத்திருப்பலியை நிறைவு செய்து, Sumuleu Ciucலுள்ள, Jakab Antal Haz பேராயர் இல்லம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்த இல்லத்திற்கு, மரத்தாலான அழகான இயேசுவின் திருஇருதயப் படம் ஒன்றை அன்பளிப்பாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்த இல்லத்தில், மாற்றுத்திறனாளிகள் சிலரையும் சந்தித்து வாழ்த்தினார், திருத்தந்தை. அதன் பின்னர் மதிய உணவருந்தி, ஹெலிகாப்டரில் Targu Mures சென்று அங்கிருந்து விமானத்தில் மோல்டாவியா மாநிலத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அம்மாநிலத்தின் Iasi நகரில், அரசியாம் அன்னை மரியா பேராலயம் செல்வார் திருத்தந்தை. பின்னர், மாலை 5.30 மணியளவில் அந்நகரின் கலாச்சார மாளிகை வளாகத்தில் இளையோரை, அவர்கள் குடும்பத்தினருடன் சந்திக்கும் நிகழ்வு நடைபெறுகின்றது.

01 June 2019, 14:19