தேடுதல்

Vatican News
திருத்தந்தையைச் சந்தித்த சுலோவேனியா பிரதமர் திருத்தந்தையைச் சந்தித்த சுலோவேனியா பிரதமர்  (ANSA)

திருத்தந்தையைச் சந்தித்த சுலோவேனியா பிரதமர்

ஜூன் 27, சுலோவேனியாவின் பிரதமர், Marjan Šarec அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், திருப்பீடச் செயலர் மற்றும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலரையும் சந்தித்து உரையாடினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 27 இவ்வியாழன் காலை, சுலோவேனியாவின் பிரதமர், Marjan Šarec அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

சுலோவேனியா பிரதமர் Šarec அவர்கள், திருத்தந்தையை சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

சுலோவேனியா நாட்டுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டின் கல்வி மற்றும், நலவாழ்வுத் துறைகளில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் ஆகியவை குறித்த நிறைவானச் சூழலைக் குறித்து, இச்சந்திப்புகளில் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

மேலும், அருளாளர்களான ஐந்து பேருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்குத் தேவையான இறுதி ஒப்புதலை வழங்க, ஜூலை 1ம் தேதி, கர்தினால்கள் அவை, வத்திக்கானில், கிளமெந்தீனா அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அருளாளரான கர்தினால் ஜான் ஹென்றி நியூமன், மற்றும், கேரளாவில் திருக்குடும்ப அருள் சகோதரிகள் சபையை நிறுவிய அருளாளரான மரிய தெரேசா சிராமல் மங்கிடியான் ஆகிய இருவரும், இந்த ஐவரில் அடங்குவர்.

மேலும், புனித கமில்லஸ் புதல்வியர் என்ற துறவு சபையை நிறுவிய ஜியூசப்பீனா வன்னீனி, இறை அன்னையின் அமல உற்பவ மறைபரப்புப் பணி அருள் சகோதரிகள் சபையை நிறுவிய துல்ச்சே லோப்பஸ் போன்தெஸ், அசிசி நகர் புனித பிரான்சிஸ் மூன்றாம் சபையைச் சேர்ந்த அருள் சகோதரி மார்கரீத்தா பேய்ஸ் ஆகிய அருளாளர்களையும் புனிதர்களாக உயர்த்தும் இறுதி ஒப்புதல் ஜூலை 1ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

27 June 2019, 15:34