தேடுதல்

Vatican News
கொள்ளை நோயுற்ற ஒருவருக்கு உதவும் புனித அலோய்சியஸ் கொன்சாகா கொள்ளை நோயுற்ற ஒருவருக்கு உதவும் புனித அலோய்சியஸ் கொன்சாகா 

புனித அலோய்சியஸ் விழாவையொட்டிய டுவிட்டர்

ஒருமைப்பாட்டுணர்வு மற்றும் கருணையின்றி, இறையியல் தனது ஆன்மாவை மட்டுமல்ல, அறிவையும், கிறிஸ்தவ முறைப்படி விளக்கும் திறனையும் இழக்கும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

வாழ்வில் எத்தகைய சூழல்களிலும், என்னென்ன நடந்தாலும், கடவுளின் அன்புமீது மட்டும் ஒருபோதும் சந்தேகப்படக் கூடாது என்று, இவ்வெள்ளியன்று, இளையோரைக் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

ஜூன் 21, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட, புனித அலோய்சியஸ் கொன்சாகா (St.Aloysius Gonzaga) திருநாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார்.  

“அன்பு இளையோரே, உங்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வாறு சொல்ல விரும்புகிறேன். கடவுள் உங்களை அன்புகூர்கிறார். உங்கள் வாழ்வில் என்னென்ன நிகழ்ந்தாலும், கடவுளின் அன்பின் மீது மட்டும் சந்தேகப்படாதீர்கள். எந்தச் சூழ்நிலையிலும், நீங்கள் வரையறையின்றி அன்புகூரப்படுகிறீர்கள்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

இயேசு சபையின் இளம் புனிதர்களில் ஒருவரான புனித அலோய்சியஸ் கொன்சாகா அவர்கள், வட இத்தாலியில் காஸ்திலியோனே என்ற நகரில், பிரபுக்கள் குடும்பத்தில் 1568ம் ஆண்டு பிறந்தார். இவர் தனது 17வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். உரோம் நகரில் கொள்ளை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்தவேளை, இப்புனிதரும் கடும் நச்சுக் காய்ச்சலால் தாக்கப்பட்டு, 1591ம் ஆண்டு ஜூன் 21ம் நாளன்று, தனது 23வது வயதில் இறைபதம் சேர்ந்தார்.

1726ம் ஆண்டில் புனிதராக அறிவிக்கப்பட்ட அலோய்சியஸ் கொன்சாகா அவர்கள், 1729ம் ஆண்டில், அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார். 

இன்னும், நேப்பிள்ஸ் பயணத்தையொட்டி, #NaplesVisit #VeritatisGaudium என்ற ‘ஹாஷ்டாக்’குடன், திருத்தந்தை, தன் 2வது டுவிட்டர் செய்தியை, இவ்வெள்ளியன்று வெளியிட்டார். செபத்தால் இடைவிடாமல் ஊட்டிவளர்க்கப்படும், ஒருமைப்பாட்டுணர்வு மற்றும் கருணையின்றி, இறையியல் தனது ஆன்மாவை மட்டுமல்ல, அறிவையும், கிறிஸ்தவ முறைப்படி விளக்கும் திறனையும் இழக்கும் என்ற சொற்களை, திருத்தந்தை தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார்.

மேலும், இணையதளக் குற்றங்களை நிறுத்துவது குறித்து, Scholas Occurrentes அமைப்பு, உரோம் நகரில் நடத்திவரும் கருத்தரங்கிற்கு, காணொளிச் செய்தி ஒன்றையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று அனுப்பியுள்ளார்.

21 June 2019, 15:17