தேடுதல்

Vatican News
பேராயருக்கு பால்யம் அணிவிக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் பேராயருக்கு பால்யம் அணிவிக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

ஆயர், தனது மந்தையை தோளில் சுமக்க வேண்டும்

ஆயர், தனது மந்தையை தோளில் சுமக்க வேண்டும், ஆயர்கள், தங்களுக்காக வாழாமல், தனது மந்தைக்காக வாழ வேண்டும், வாழ்வைப் பெறும்பொருட்டு, அதை இழக்க வேண்டும் என்பதை பால்யம் உணர்த்துகின்றது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா திருப்பலியில் ஆற்றிய மறையுரையில், பேராயர்கள் அணியும், பால்யம் என்ற கழுத்துப்பட்டையின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார்.

ஆயர், தனது மந்தையை தோளில் சுமக்க வேண்டும் என்பதையும், ஆயர்கள், தங்களுக்காக வாழாமல், தனது மந்தைக்காக வாழ வேண்டும் என்பதையும், வாழ்வைப் பெறும்பொருட்டு, அதை இழக்க வேண்டும் என்பதையும், பால்யம் நினைவுறுத்துகின்றது என்று, திருத்தந்தை கூறினார்.  

இத்திருப்பலியில், இந்தியாவின் நாக்பூர் பேராயர் ஜோசப் கொன்சால்வெஸ் அவர்கள் உட்பட, பல்வேறு நாடுகளின் 31 பேராயர்களுக்கு பால்யங்களை அணிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஆண்டில் பேராயர்களாக நியமனம் பெற்ற, இந்த 31 பேராயர்களில், நால்வர், மியான்மார், வியட்நாம், இந்தோனேசியா, இந்தியா ஆகிய ஆசிய நாடுகளையும், ஒருவர். ஓசியானியாவையும், எட்டுப் பேர் ஆப்ரிக்காவையும் சேர்ந்தவர்கள்.

டுவிட்டர்

மேலும், ஜூன் 29, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவை மையப்படுத்தி, ‘ஹாஷ்டாக்’குடன் (#StsPeterandPaul) டுவிட்டர் செய்தியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதத்துவ வாழ்வு பற்றி கூறியுள்ளார்.

“புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகிய இருவரும், கடவுள் முன்னிலையில், ஒளிவுமறைவின்றி இருந்தனர். அவர்கள், தங்கள் வாழ்வு முழுவதும், அதன் இறுதிவரை, தாழ்மைப் பண்பைக் காத்து வந்தனர், புனிதத்துவம் என்பது, தன்னை உயர்த்துவதில் அல்ல, மாறாக, தாழ்த்திக்கொள்வதில் அடங்கியுள்ளது என்பதை, இவ்விருவரும் புரிந்து வைத்திருந்தனர்” என்ற சொற்கள், திருத்தந்தையின் ஹாஸ்டாக் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.  

29 June 2019, 12:00