தேடுதல்

Vatican News
நீரில் மூழ்கி இறந்த இளம் தந்தையும் அவரது பெண் குழந்தையும் நீரில் மூழ்கி இறந்த இளம் தந்தையும் அவரது பெண் குழந்தையும் 

திருத்தந்தையை வேதனையில் நிறைத்த செய்தி

அமெரிக்க ஐக்கிய நாட்டை அடைவதற்கு, நதி வழியே முயன்ற ஓர் இளம் தந்தையும், அவரது மகளும், நீரில் மூழ்கி இறந்த செய்தி, திருத்தந்தையை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மெக்சிகோ நாட்டிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டை அடைவதற்கு, நதி வழியே முயன்ற ஓர் இளம் தந்தையும், அவரது மகளும், நீரில் மூழ்கி இறந்த செய்தி, திருத்தந்தையை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது என்று, வத்திக்கான் செய்தித்துறை தலைவர், அலெஸ்சாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், இப்புதனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ரியோ கிராந்தே (Rio Grande) என்ற நதியில் மூழ்கி, கரையோரம் ஒதுங்கியிருந்த தந்தை மற்றும் அவரது பெண் குழந்தை ஆகிய இருவரின் படம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மிகுந்த வேதனையில் நிறைத்தது என்றும், அவ்விருவருக்காகவும், அதே வண்ணம், போர், மற்றும் ஏனைய கொடுமைகளிலிருந்து தப்பித்துச் செல்லும் வழியில் உயிரிழந்த அனைவருக்காகவும், தான் செபித்து வருவதாக, திருத்தந்தை கூறினார் என்றும் ஜிசோத்தி அவர்கள் கூறினார்.

எல் சால்வதோர் நாட்டைச் சேர்ந்த 25 வயதான ஆஸ்கர் அல்பெர்த்தோ மார்த்தினேஸ் ரமீரெஸ் அவர்களும், அவரது 23 மாத பெண் குழந்தை வலேரியாவும், மெக்சிகோவிலிருந்து, ரியோ கிராந்தே நதி வழியே அமெரிக்க ஐக்கிய நாட்டை அடைய முயன்ற வேளையில், இருவரும் வெள்ளத்தில் சிக்கி, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று பதிவு செய்திருந்த டுவிட்டர் செய்தியில், "சந்திப்பதற்கும், இணைப்பதற்கும் துணிவும், நம்பிக்கையும் கொண்டோர் பேறுபெற்றோர்" என்ற சொற்கள் இடம் பெற்றிருந்தன.

27 June 2019, 15:34