தேடுதல்

Vatican News
செப வேளையில் திருத்தந்தை பிரான்சிஸ் செப வேளையில் திருத்தந்தை பிரான்சிஸ் 

அருள்பணியாளர்களைக் கருத்துடன் கண்ணோக்கிப் பார்க்க...

தங்கள் பணிவான, வாழ்வின் வழியே, மக்களோடு ஒன்றித்திருக்க, குறிப்பாக மிகவும் வறுமைப்பட்டோருடன் ஒன்றித்திருக்க, தங்களையே அர்ப்பணிக்கும்படி, அருள்பணியாளர்களுக்காக செபிப்போம் – திருத்தந்தையின் செபக்கருத்து

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றும் அருள்பணியாளர்களைக் கருத்துடன் கண்ணோக்கிப் பார்க்கும்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கு, ஜூன் மாத செபக்கருத்தின் வழியே அழைப்பு விடுத்துள்ளார்.

இயேசு சபையினர் நடத்திவரும் செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பின் வழியே, ஒவ்வொரு மாதமும் தன் செபக்கருத்துக்களை 'The Pope Video' என்ற காணொளி வழியே வெளியிட்டு வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்களின் வாழ்வை மையப்படுத்தி, நடைபெறும் ஜூன் மாதத்திற்குரிய செபக்கருத்தை இவ்வியாழனன்று வெளியிட்டார்.

நமது சமுதாயங்களில் உழைக்கும் அருள்பணியாளர்களைக் கருத்துடன் காணும்படி உங்களைக் கேட்கிறேன் என்று தன் காணொளிச் செய்தியின் துவக்கத்தில் குறிப்பிடும் திருத்தந்தை, அருள்பணியாளர்கள் குறைபாடு ஏதுமற்ற தலைசிறந்தவர்கள் அல்ல, இருந்தாலும், அவர்களில் பலர், தங்களிடம் உள்ள அனைத்தையும், பணிவோடும், மகிழ்வோடும் தங்கள் வாழ்நாளின் இறுதிவரை மக்களுக்கு அளிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

மக்களுக்கு நெருக்கமாக வாழ்ந்து, ஒவ்வொருவருக்காகவும் கடினமாக உழைக்கும் அருள்பணியாளர்களின் சாட்சிய வாழ்வுக்காக நன்றியறிந்திருப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

அருள்பணியாளர்கள், தங்கள் பணிவான, வாழ்வின் வழியே, மக்களோடு ஒன்றித்திருக்க, குறிப்பாக மிகவும் வறுமைப்பட்டோருடன் ஒன்றித்திருக்க, தங்களையே அர்ப்பணிக்கும்படி, அவர்களுக்காக செபிப்போம் என்ற சொற்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஜூன் மாத செபக்கருத்தாக வெளியிடப்பட்டுள்ளது.

செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இயேசு சபை அருள்பணியாளர், Frédéric Fornos அவர்கள், திருத்தந்தையின் ஜூன் மாத செபக்கருத்தை வெளியிட்ட வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Buenos Aires பேராயராகப் பணியாற்றியபோது, "நாம் செபிக்கும் வேளையில், மக்களுக்காகப் போராடுகிறோம்" (2007, ஜூலை 29) என்று தன் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கு அனுப்பிய ஒரு செய்தியில் கூறியுள்ளதை நினைவுகூர்ந்தார்.

பாவமும், இடறல் தரும் பல விடயங்களும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதுபோல், புனிதம் மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை என்று கூறிய அருள்பணி Fornos அவர்கள், இதை மனதில் வைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மைச் சுற்றி அமைதியாக, பணிவாகப் பணியாற்றும் அருள்பணியாளர்களை கவனமுடன் கண்ணோக்கிப் பார்க்கும்படி தன் ஜூன் மாத செபக்கருத்தின் வழியே அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

06 June 2019, 14:15