தேடுதல்

Vatican News
நேபிள்ஸ் நகரில் இறையியல் கருத்தரங்கின் நிறையமர்வில் கலந்துகொண்ட திருத்தந்தை நேபிள்ஸ் நகரில் இறையியல் கருத்தரங்கின் நிறையமர்வில் கலந்துகொண்ட திருத்தந்தை  (Vatican Media)

மத்திய தரைக் கடல் சூழலில் பல்சமய உரையாடலும் புலம்பெயர்வும்

கலாச்சாரம், மொழி, மதம், மரபு போன்றவற்றினின்று வேறுபட்டு இருப்பவர்களை எவ்வாறு ஏற்றுக்கொள்வது, பிரிவினைச் சுவர்களை எழுப்புவதைவிட, உடன்பிறந்த உணர்வின் பாதைகளாக, மதங்கள் எவ்வாறு செயல்படுவது... போன்றவை பற்றி சிந்திக்க வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

மத்திய தரைக்கடல் வழியாக இடம்பெறும் புலம்பெயர்வு மற்றும் இறையியலில் அது ஏற்படுத்திவரும் தாக்கம் பற்றி, இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக, ஜூன் 21, இவ்வெள்ளியன்று அந்நகருக்கு, ஒருநாள் பயணம் மேற்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வெள்ளி காலை எட்டு மணிக்கு வத்திக்கானிலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 9 மணிக்கு நேப்பிள்ஸ் நகரை அடைந்து, அந்நகரில், இயேசு சபையினர் நடத்திவரும் மாஸ்ஸிமோ கல்லூரியில் நடைபெற்ற, இறையியல் கருத்தரங்கின் நிறையமர்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

திருஅவை சார்ந்த பல்கலைக்கழகங்களைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ம் ஆண்டு சனவரி 29ம் நாளன்று வெளியிட்ட Veritatis Gaudium அதாவது, உண்மையின் மகிழ்வு என்ற திருத்தூது கொள்கை விளக்கத்தை மையப்படுத்தி, ஜூன் 20, இவ்வியாழனன்று, இந்த இரண்டு நாள் கருத்தரங்கு தொடங்கியது.

மத்திய தரைக்கடல், எப்போதுமே, கடந்துசெல்லும் மற்றும், பரிமாற்றங்கள்   நடைபெறும் இடமாக அமைந்துள்ளது, அங்கு, சிலவேளைகளில் ஆயுத மோதல்களும் இடம்பெறுகின்றன, இக்காலத்தில், இப்பகுதி, பல்வேறு துன்பம்நிறைந்த கேள்விகளுக்கு உள்ளாகியுள்ளது என்று உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரே மனிதக் குடும்பத்தில் நாம் ஒருவரையொருவர் எவ்வாறு வைத்துக்கொள்வது, உண்மையான உடன்பிறந்தநிலையாக மாறுகின்ற, சகிப்புத்தன்மையும் அமைதியும் நிறைந்த நல்லிணக்க வாழ்வை எவ்வாறு வளர்ப்பது, நம் சமுதாயங்கள், கலாச்சாரம், மொழி, மதம், மரபு போன்றவற்றினின்று வேறுபட்டு இருப்பவர்களை எவ்வாறு ஏற்றுக்கொள்வது, பிரிவினைச் சுவர்களை எழுப்புவதைவிட, உடன்பிறந்த உணர்வின் பாதைகளாக, மதங்கள் எவ்வாறு செயல்படுவது... இவை போன்ற கேள்விகளை, அபு தாபியில் நடைபெற்ற பல்சமயக் கூட்டத்தில் எழுப்பினோம் என்று உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவை போன்ற கேள்விகள் பல்வேறு நிலைகளில் கேட்கப்பட வேண்டும் என்றும், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளல், செவிமடுத்தல் மற்றும் ஆய்வு நடத்துவதற்கு, தாராளம் நிறைந்த அர்ப்பணிப்பு தேவைப்படுகின்றது என்றும் கூறியத் திருத்தந்தை, இது, சுதந்திரம், அமைதி, உடன்பிறந்த உணர்வு மற்றும் நீதியின் வழிகளை ஊக்குவிக்கும் என்றும் கூறினார். 

21 June 2019, 14:47