தேடுதல்

Vatican News
ஐரோப்பாவில் இறையழைத்தல்களை ஊக்குவிக்கும் மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ளோருடன்...... ஐரோப்பாவில் இறையழைத்தல்களை ஊக்குவிக்கும் மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ளோருடன்......  (Vatican Media)

இளையோரை அழைப்பதற்கு, தயக்கம் கொள்ளத் தேவையில்லை

அழைத்தல் என்பது, ஒவ்வொருவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும் ஓர் அம்சம், நாம் ஒவ்வொருவரும் புனிதத்தில் வளர விடுக்கப்படும் சவாலாக அழைத்தல் விளங்குகிறது - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரை மையப்படுத்தி எழுதிய 'கிறிஸ்து வாழ்கிறார்' என்ற திருத்தூது அறிவுரை மடலின் துவக்கத்தில், "கிறிஸ்து தொடும் ஒவ்வொன்றும் இளமையாக, புதிதாக, வாழ்வு நிறைந்ததாக மாறுகிறது" என்று கூறியுள்ளதை, தன்னைச் சந்திக்க வந்திருந்த ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் கூறினார்.

ஐரோப்பாவில் இறையழைத்தல்களை ஊக்குவிக்கும் மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ளோரின் கருத்தரங்கில் கலந்துகொண்ட 80 பிரதிநிதிகளை, ஜூன் 6, இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, புனிதம், ஒன்றிணைப்பு, மற்றும் மகிழ்வு என்ற மூன்று கருத்துக்களில் தன் எண்ணங்களைத் தொகுத்து வழங்கினார்.

அழைத்தல் என்று சொன்னதும், இளையோரை எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது என்பதை, தன் முதல் பகுதியில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அழைத்தல் என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும் ஓர் அம்சம் என்றும், நாம் ஒவ்வொருவரும் புனிதத்தில் வளர விடுக்கப்படும் சவாலாக அழைத்தல் விளங்குகிறது என்றும் கூறினார்.

மேலும், இறைவனின் அழைத்தலுக்கு செவிமடுக்கும் ஒவ்வொருவரும், தனிப்பட்ட முறையில் புனிதத்தில் வளர்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்று எண்ணுவதற்குப் பதில், அந்த அழைத்தல், மற்றவரோடு நம்மைப் பிணைக்கிறது என்பதை உணரவேண்டும் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அழைத்தல் என்பதை, ஒரு பழங்கால கருத்தாக எண்ணிப்பார்ப்பதற்குப் பதில், அது, இன்றும், நம்மிடையே பொருள் நிறைந்த, துடிப்பான ஒரு கருத்தாகப் போற்றி காக்கப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் அழைப்பு விடுத்தார்.

பொதுவாக, அழைத்தல் என்றதும், நமது சுதந்திரத்தைப் பறிக்கும் ஓர் எண்ணமாக அதை இளையோர் கருதக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இதற்கு மாறாக, கிறிஸ்துவில் தங்கள் முழு மகிழ்வைக் காண விழைவோர், அவரது அழைப்பை ஏற்கும் அருளையும் பெறுவர் என்று எடுத்துரைத்தார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுக்கும், அருள்பணியாளர் வாழ்வுக்கும் இளையோரை அழைப்பதற்கு, தயக்கமோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை என்பதை ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான அர்ப்பணிப்புடன் உழைப்பவர்களைக் காணும் இளையோர் தாங்களாகவே இந்த வாழவைத் தேர்ந்தெடுக்க இவர்களின் எடுத்துக்காட்டு உதவியாக இருக்கும் என்று கூறினார்.

பிளவுபட்டு, காயப்பட்டு நிற்கும் இவ்வுலகைப்போலவே, திருஅவையும், பிளவுகளையும் காயங்களையும் சந்திக்கிறது என்பதை தெளிவுபடுத்தியத் திருத்தந்தை, ஐரோப்பாவில் இறையழைத்தல்களை ஊக்குவிக்கும் மேய்ப்புப்பணியில் ஈடுபட்டிருப்போர், உடைந்த உள்ளங்களைத் தேற்றும் பணியில் உள்ள சவால்களை இளையோர் முன் வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

06 June 2019, 14:21