தேடுதல்

Vatican News
ருமேனிய Rom இன சமுதாயத்தினரைச் சந்தித்த திருத்தந்தை ருமேனிய Rom இன சமுதாயத்தினரைச் சந்தித்த திருத்தந்தை 

ருமேனிய Rom இன சமுதாயத்தினருடன் திருத்தந்தை

அருளாளர் மறைசாட்சி ஆயர் Ioan Suciu அவர்கள், Rom இன மக்களுடன் ஒருமைப்பாடு மற்றும், உடன்பிறந்த உணர்வை வெளிப்படுத்தும் முறையில், அவ்வினச் சிறாருடன் தெருக்களில் கால்பந்து விளையாடினார்

மேரி தெரேசா - வத்திக்கான்

ஜூன் 02, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 3.40 மணிக்கு, Rom நாடோடி இன சமுதாயம் வாழ்கின்ற Barbu Lautaru பகுதிக்குக் காரில் சென்று, அவர்களைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். இம்மக்கள், பிளாஜ் நகரின் மிகப் பழைய இடத்தில் வாழ்கின்றனர். இவர்களுக்கென புதிய ஆலயம் ஒன்று கட்டப்படுவதற்கு, 2017ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியன்று, திருப்பீட கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர், கர்தினால் லியோனார்தி சாந்த்ரி அவர்கள், அடிக்கல்லை அர்ச்சித்தார். 2011ம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, பிளாஜ் நகரின் மக்கள் தொகையில் 9 விழுக்காட்டினர் Rom இனத்தவர். இந்நிகழ்வில் Rom இனத்தைச் சார்ந்த, கிரேக்க-கத்தோலிக்க திருஅவையின் அருள்பணியாளர் ஒருவர் சாட்சியமும் சொன்னார். இச்சனிக்கிழமையன்று, அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள மறைசாட்சி ஆயர் Ioan Suciu அவர்கள், Rom இன மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வையும், உடன்பிறந்த உணர்வையும் வெளிப்படுத்தும் முறையில், அவ்வினச் சிறாருடன் தெருக்களில் கால்பந்து விளையாடியதை திருத்தந்தையிடம் அந்த அருள்பணியாளர் நிநைவுபடுத்தினார். திருத்தந்தையின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றியும் சொன்னார். அந்நிகழ்வில், Rom நாடோடி இனச் சிறார் பாடிய பாடலில் மகிழ்ந்து அவர்களை ஆசீர்வதித்தார். அவ்வினச் சமுதாயத்தின் ஆலயத்திற்கு, திருநற்கருணை கதிர் பாத்திரம் ஒன்றையும், திருப்பலி பாத்திரம் ஒன்றையும் அன்பளிப்பாக அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், பிளாஜ் நகரிலிருந்து, சிபியு நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார் திருத்தந்தை. சிபியு விமானத்தளத்தில், ருமேனிய அரசுத்தலைவர் திருத்தந்தைக்குப் பிரியாவிடை அளித்து, நன்றியுடன் உரோம் நகருக்கு அனுப்பி வைத்தார். இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முப்பதாவது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக அமைந்த ருமேனியா நாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது.

டுவிட்டர் செய்திகள்

“ருமேனியர்கள், உடன்பிறந்த உணர்வு மற்றும் உரையாடலைப் பயன்படுத்தி, பிரிவினைகளை மேற்கொண்டு, சுதந்திரம் மற்றும் இரக்கத்திற்குச் சாட்சிகளாக விளங்குவீர்களாக”;

“இயேசுவின் பாதையைத் தேர்ந்துகொள்வோம். இப்பாதை, முயற்சியை வலியுறுத்துகிறது. ஆயினும், இப்பாதை அமைதியைக் கொணர்கிறது”;

“ருமேனிய குடிமக்கள் எல்லார்மீதும் அன்னை மரியா, தனது தாய்க்குரிய பாதுகாப்பை அருள்வாராக. இவர்கள் தங்கள் வரலாற்றில் எப்போதும் அன்னை மரியாவின் பரிந்துரையில் நம்பிக்கை வைத்தவர்கள். ருமேனிய மக்களின் விசுவாசப் பாதையில், அன்னை மரியா வழிநடத்துமாறு செபிக்கின்றேன்”. இவ்வாறு, இஞ்ஞாயிறன்று தன் டுவிட்டர் செய்திகளில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

02 June 2019, 14:54