தேடுதல்

Vatican News
வத்திக்கான் தபால், தொலைப்பேசி துறை பணியாளர்களுடன் திருத்தந்தை வத்திக்கான் தபால், தொலைப்பேசி துறை பணியாளர்களுடன் திருத்தந்தை  (Vatican Media)

வத்திக்கான் தபால், தொலைப்பேசி துறை பணியாளர்களுடன்...

"அனைத்து இடங்களிலும், செல்வர்கள் மற்றும் வறியோரிடம் நான் செல்லவேண்டும்" என்று பொருள்படும் இலத்தீன் சொற்கள், பாப்பிறை அரசு சார்ந்த தபால் பெட்டிகளில் பொறிக்கப்பட்டுள்ளன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானிலிருந்து செல்லும் தபால், மற்றும் தொலைப்பேசி தொடர்புகள் வழியே, உலகில் உள்ள எண்ணற்ற மக்களுடன் திருத்தந்தையர் தொடர்பு கொள்ளமுடிகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த தபால், மற்றும் தொலைப்பேசி துறைகளில் பணியாற்றும் வத்திக்கான் ஊழியர்களிடம் கூறினார்.

ஜூன் 6 இவ்வியாழன் நண்பகலில், திருப்பீடத்தின் வத்திக்கானின் கிளமெந்தீனா அரங்கத்தில் கூடியிருந்த 200க்கும் மேற்பட்ட தபால், மற்றும் தொலைப்பேசி துறை பணியாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தத் திருத்தந்தை, யாருடைய கவனத்தையும் ஏற்காமல், அவர்கள், திரைமறைவில் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.

வத்திக்கான் தபால், மற்றும் தொலைப்பேசி துறைகளில் பணியாற்றும் தோன் ஓரியோனே மற்றும் புனித பவுல் துறவு சபையினரை திருத்தந்தை தனிப்பட்ட முறையில் வாழ்த்தினார்.

"அனைத்து இடங்களிலும், செல்வர்கள் மற்றும் வறியோரிடம் நான் செல்லவேண்டும்" என்று பொருள்படும் இலத்தீன் சொற்கள், பாப்பிறை அரசு சார்ந்த தபால் பெட்டிகளில் பொறிக்கப்பட்டுள்ளன என்பதை, திருத்தந்தை தன் உரையில் தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டினார்.

உலகிலேயே மிகச்சிறிய நாடு என்று கருதப்படும் வத்திக்கானிலிருந்து, உலகெங்கும் கிறிஸ்துவ செய்தியைப் பரப்புவதில், வத்திக்கான் தபால், மற்றும் தொலைப்பேசி துறைகள் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மகிழ்வுடன் குறிப்பிட்டார்.

இத்துறைகளில் பணியாற்றும் பலர் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதை சிறப்பாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, அந்த நேரடித் தொடர்புகளில், கிறிஸ்தவ சாட்சிகளாக அவர்கள் விளங்குவது, சக்தி மிகுந்த தொடர்பாக மாறுகிறது என்று கூறினார்.

அன்னை மரியா, புனித லூயிஜி ஓரியோனே மற்றும் அருளாளரான ஜேம்ஸ் ஆல்பேரியோனே ஆகியோர், வத்திக்கான் தபால், மற்றும் தொலைப்பேசி துறைகளில் பணியாற்றுவோர் அனைவரையும் பாதுகாத்து வழிநடத்துவார்களாக என்று கூறி, திருத்தந்தை கூடியிருந்தோருக்கு தன் ஆசீரை வழங்கினார்.

06 June 2019, 14:31