தேடுதல்

Vatican News
யாஜ் அன்னை மரியா பேராலயத்தில் திருத்தந்தை யாஜ் அன்னை மரியா பேராலயத்தில் திருத்தந்தை  (Vatican Media)

யாஜ் அன்னை மரியா பேராலயத்தில் வயதானவர் சந்திப்பு

ருமேனிய வரலாற்றின் அடையாளமாகவும், அந்நாட்டின் சமூக, கலாச்சார, கல்வி மற்றும், கலை வாழ்வில் முன்னணியாகவும் உள்ள யாஜ் நகர் பற்றி அறியாத ருமேனியர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்

மேரி தெரேசா - வத்திக்கான்

“எல்லாவற்றிலும் ஊடுருவும் மற்றும் மீட்பின் மகிழ்வோடு நம் மக்களை நிரப்பும் புளிக்காரமாக, நற்செய்தியை விளங்கச் செய்வதற்கு, நாம் ஒன்றிணைந்து நடைபயில்வோம்!” என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டு, ருமேனியா நாட்டில், ஜூன் 01, இச்சனிக்கிழமை மாலை திருத்தூதுப்பயண நிகழ்வுகளைத் தொடங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். இச்சனிக்கிழமை காலையில், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான விசுவாசிகளுக்கு, சுமுலியு சுக் (Şumuleu Ciuc) அன்னை மரியா திருத்தல வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று மாலை, ஐந்து மணியளவில் யாஜ் (Iași) நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். ருமேனியாவில் இரண்டாவது பெரிய நகரமான யாஜ், வரலாற்று சிறப்புமிக்க மோல்டாவியா மாநிலத்தின் தலைநகரமாகும். Bahlui நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகர், 1916ம் ஆண்டு முதல், 1918ம் ஆண்டு வரை, ருமேனியாவின் தலைநகரமாகவும் விளங்கியது.  ருமேனிய வரலாற்றின் அடையாளமாகவும், அந்நாட்டின் சமூக, கலாச்சார, கல்வி மற்றும், கலை வாழ்வில் முன்னணியாகவும் உள்ள யாஜ் நகர் பற்றி அறியாத ருமேனியர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் என, வரலாற்று ஆசிரியர் Nicolae Iorga அவர்கள் சொல்லியுள்ளார். 2018ம் ஆண்டு டிசம்பரில், யாஜ் நகர், ருமேனியாவின் வரலாற்றுத் தலைநகரம் என, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இச்சனிக்கிழமை மாலையில், யாஜ் நகரிலுள்ள அரசியாம் அன்னை மரியா கத்தோலிக்கப் பேராலயத்திற்குச் சென்று, அங்கு கூடியிருந்த வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோயாளிகள் என, ஏறத்தாழ 600 பேரை ஒவ்வொருவராக வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்பேராலயம், 12 ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமானப் பணிக்குப் பின், 2005ம் ஆண்டில் அர்ச்சிக்கப்பட்டது. இங்கு வைக்கப்பட்டுள்ள, மறைசாட்சி Anton Durcovici அவர்களின் திருப்பொருள்களிடம் செபித்தார் திருத்தந்தை. இறுதியில், மீட்பராம் கிறிஸ்துவின் பளிங்கு திருவுருவம் ஒன்றையும், ருமேனியாவில், சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லாவுக்கு வழிகாட்டும் கல் ஒன்றையும் ஆசீர்வதித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

02 June 2019, 14:45