தேடுதல்

Vatican News
அயர்லாந்தில் வாழ்வுக்கு ஆதரவாக... அயர்லாந்தில் வாழ்வுக்கு ஆதரவாக...   (AFP or licensors)

வெட்கப்படும் அளவுக்கு பெண்களை நடத்தும்முறைக்கு எதிராக..

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், அயர்லாந்து கத்தோலிக்கத் திருஅவைகள், ஜூன் 16, ஞாயிறன்று, வாழ்வதற்கு உரிமை என்ற நாளைச் சிறப்பிக்கின்றன

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்கத் திருஅவை, வாழ்வதற்கு உரிமை என்ற நாளைச் சிறப்பிக்கத் தயாரித்துவரும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளுக்கு ஆதரவாக, செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

‘குடும்பங்களில் இடம்பெறும் உரிமை மீறல்களுக்கு எதிராய்’ என்ற தலைப்பில் நிகழவிருக்கும் இந்த நாளுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், அனைத்து விதமான உரிமை மீறல்களுக்கு எதிராய் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.

சிலவேளைகளில் பொருள்கள்போன்றும், வெட்கப்படும் அளவுக்கும் பெண்கள், நடத்தப்படும்முறை பற்றியும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, சமுதாயத்தில், மிகவும் நலிந்த நம் சகோதரர், சகோதரிகளுக்கு ஆதரவாக ஆயர்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு, தனது ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மனித வாழ்வும் அழகானது மற்றும் புனிதமானது என்ற நற்செய்தியைப் பகிர்வதற்கு, நாம் எல்லாரும் சிறப்பான முறையில் அழைக்கப்பட்டுள்ளோம் எனவும், வாழ்வு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் எல்லாருக்கும், தனது ஆதரவையும், அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்குவதாகவும், திருத்தந்தை கூறியுள்ளார்.

திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில், இச்செய்தியை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்கத் திருஅவைக்கு அனுப்பியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், அயர்லாந்து கத்தோலிக்கத் திருஅவைகள், ஜூன் 16, ஞாயிறன்று, வாழ்வதற்கு உரிமை என்ற நாளைச் சிறப்பிக்கின்றன

இதற்கிடையே, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், நான்கு பெண்களில் ஒருவர், மற்றும் ஆறு ஆண்களில் ஒருவர், தங்கள் வாழ்நாளில் வீடுகளில் உரிமை மீறல்களால் துன்புறுகின்றனர். இங்கிலாந்தில், ஒவ்வொரு வாரமும், தனது துணைவரால், இரண்டு பெண்கள் கொலைசெய்யப்படுகின்றனர் என்று, ஆயர் ஜான் ஷெரிகான் அவர்கள் கூறியுள்ளார்.

08 June 2019, 15:25