தேடுதல்

புக்காரெஸ்ட் நகரில்,  திருத்தந்தை பிரான்சிஸ்,  ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை டானியேல் புக்காரெஸ்ட் நகரில், திருத்தந்தை பிரான்சிஸ், ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை டானியேல் 

புக்காரெஸ்ட் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ்

கத்தோலிக்கரும், ஆர்த்தடாக்ஸ் சபையினரும், பழங்காலத் தவறுகளையும், முற்சார்பு எண்ணங்களையும் மறந்து, பொதுவான இலக்கு நோக்கி ஒன்றிணைந்து நடைபயில, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்

மேரி தெரேசா - வத்திக்கான்

தென்கிழக்கு ஐரோப்பாவில், மலைகள், வனங்கள், நதிகள் என, வளமையான இயற்கை வளங்களால் நிறைந்திருக்கும் நாடு ருமேனியா. 1862ம் ஆண்டில் இந்நாட்டின் தலைநகரமாக மாறிய புக்காரெஸ்ட், மிகப்பெரிய நகரம் மட்டுமல்லாமல், கல்வி, கலாச்சாரம், பொழுதுபோக்கு, தொழிற்சாலை மற்றும் பொருளாதார மையமாகவும் விளங்குகின்றது. ருமேனியாவின் தென்கிழக்கே, Dâmbovița நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகரம், டான்யூப் நதிக்கு, ஏறத்தாழ அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. புக்காரெஸ்ட் நகரம், வரலாற்று ஏடுகளில், 1459ம் ஆண்டில்தான் முதலில் இடம்பெற்றுள்ளதெனக் கூறப்படுகின்றது. இந்நகரின் கட்டடக் கலைகள் மற்றும் அமைப்புமுறைகளை வைத்து, இரண்டு உலகப்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், இது, "சிறிய பாரிஸ்" என அழைக்கப்பட்டது. இந்த அழகிய நகரத்தில், மே 31, இவ்வெள்ளிக்கிழமையன்று, தனது 30வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தைத் தொடங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். "நாம் இணைந்து நடைபயில்வோம்" என்ற விருதுவாக்குடன் இந்த திருத்தூதுப்பயணத்தை ஆரம்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில், ருமேனியாவின் அரசியல் மற்றும் பொதுநல அதிகாரிகளைச் சந்தித்தார். அவர்களிடம், நலிந்தவர்கள், வறியவர்கள், சிறியோர் என, எவரும் ஒதுக்கப்படாத, ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.  அடுத்து, ருமேனியாவில், 87 விழுக்காட்டினராக வாழ்கின்ற ஆர்த்தடாக்ஸ் சபையினரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அச்சபையின் தலைவரான, முதுபெரும் தந்தை டானியேல் அவர்களைத் தனியாகச் சந்தித்து உரையாடிய பின்னர், அச்சபையின் மாமன்றத்தினரையும் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை. ருமேனியாவின் தேசிய அடையாளமாக விளங்கும், ஆர்த்தடாக்ஸ் சபையின், மக்களின் மீட்பு புதிய பேராலயம் சென்று உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கரும், ஆர்த்தடாக்ஸ் சபையினரும், பழங்காலத் தவறுகளையும், முற்சார்பு எண்ணங்களையும் மறந்து, பொதுவான இலக்கு நோக்கி ஒன்றிணைந்து நடைபயில்வோம் எனக் கேட்டுக்கொண்டார். முன்னாள் சோவியத்தின் கம்யூனிச ஆட்சி காலத்தில், உக்ரைன் நாடு போன்று, ருமேனியக் கிரேக்க-கத்தோலிக்கரும், கடும் சித்ரவதைக்கு உள்ளாகினர். அச்சமயத்தில், கிரேக்க-கத்தோலிக்க திருஅவை, நாட்டின் சட்டத்தால் தடை செய்யப்பட்டது. திருஅவையின் சொத்துக்கள் ஆர்த்தடாக்ஸ் சபையுடன் இணைக்கப்பட்டன. அதுவுமின்றி, விசுவாசிகளும், அச்சபையில் சேருவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இதற்கு இணங்காதவர்கள் கடுமையாய்த் துன்புறுத்தப்பட்டனர் மற்றும் கொலைசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2019, 14:03