தேடுதல்

Vatican News
கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு பிரதிநிதிகளுடன் திருத்தந்தை கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு பிரதிநிதிகளுடன் திருத்தந்தை 

கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு பிரதிநிதிகள் சந்திப்பு

நவீன அடிமைமுறைகளை ஒழிக்கவும், புலம்பெயர்தோர், மாற்றுத்திறனாளர்கள் மற்றும், குடிபெயர்ந்தோரை ஏற்கவும், அமைதியை ஊக்குவிக்கவும் கத்தோலிக்கரும், கான்ஸ்தாந்திநோபிள் ஆர்த்தடாக்ஸ் சபையினரும் ஒன்றிணைந்து உழைக்க திருத்தந்தை அழைப்பு

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஒருவர் மற்றவரின் தனித்துவங்களை மதிப்பது மற்றும், பன்மைத்தன்மையின் அமைப்புகளில், நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதன் வழியாக, கத்தோலிக்கருக்கும், ஆர்த்தடாக்ஸ் சபையினருக்கும் இடையே முழு ஒன்றிப்பை ஏற்படுத்த முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவையொட்டி, வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தையின் பிரதிநிதிகளை, ஜூன் 28, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு தெரிவித்தார்.

கத்தோலிக்கர், கிறிஸ்தவ சபைகளுடன் உரையாடலை மேற்கொள்வது, பன்மைத்தன்மையின் நியாயமான அமைப்புகளில், முழு ஒன்றிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று கூறியத் திருத்தந்தை, பிறரன்பில் பல குரல்கள் ஒன்றிணையும் உண்மையான ஒன்றிப்பிற்கு உதவுபவர், தூய ஆவியார் என்றும் கூறினார்.

நம் ஆதாரங்களைப் பகிர்ந்துகொள்வது, நம் ஒவ்வொருவரிலும் ஆண்டவர் விதைத்து வளரச் செய்துள்ள நன்மைத்தனத்தைக் கண்டுகொள்வது, உரையாடல் குறித்து அஞ்சாமல், ஒருவர் ஒருவரிடமிருந்து கற்றுக்கொண்டு, தெளிவான வகையில், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை வழங்குவது போன்றவை, நம் சந்திப்புகளில் மதிப்புமிக்கதாகக் கருதுகிறேன் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆர்த்தடாக்ஸ் பிரதிநிதிகளிடம் கூறினார்.

கிறிஸ்தவ சபைகளுக்கிடையே நிலவும் துர்மாதிரிகையான பிரிவினைகள், முழுவதும் குணப்படுத்தப்படவில்லை, ஆயினும், கடந்தகால முற்சார்புஎண்ணங்களால் கட்டுப்படுத்தப்படாமல், செபத்தில், நல்லிணக்கத்துடன் நற்செய்தியை அறிவிப்பதில், தேவையில் இருப்பவர்களுக்கு உதவுவதில், உண்மையில் உரையாடல் நடத்துவதில், போன்றவைகளால் இந்தப் பிரிவினைகளை அகற்ற முடியும் என்றும், திருத்தந்தை கூறினார்.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைக் காப்பதை ஊக்குவிப்பது, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, ஏனையோர்க்கும் உடனடித் தேவையாக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, அடிமைமுறையின் நவீன வடிவங்களுக்கு எதிராகச் செயல்படுவது, புலம்பெயர்தோர்,  மாற்றுத்திறனாளர்கள் மற்றும், குடிபெயர்ந்தோரை ஏற்று, சமுதாயத்துடன் ஒருங்கிணைப்பது, எல்லா நிலைகளிலும் அமைதியை ஊக்குவிப்பது ஆகியவற்றில், கத்தோலிக்கரும், கான்ஸ்தாந்திநோபிள் ஆர்த்தடாக்ஸ் சபையினரும் ஒன்றிணைந்து உழைத்து வருவது, நல்ல அடையாளம் எனவும் திருத்தந்தை பாராட்டினார்.

கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களுக்கு, வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

28 June 2019, 15:56