தேடுதல்

Vatican News
 வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி  (Vatican Media)

தனது வாழ்வுக்குச் சான்று பகர்கின்றவர்களை இயேசு தேடுகிறார்

உரோம் நகர் ஆயர் என்ற முறையில், பழம்பெருமை வாய்ந்த உரோம் நகரின் பாதுகாவலர்களான திருத்தூதர்களான புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா திருப்பலியை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், தலைமையேற்று நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருத்தூதர்களான புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகிய இருவரும், வாழ்வுக்கும், இறைவனின் மன்னிப்புக்கும், இயேசுவுக்கும் சாட்சிகளாகத் திகழ்கின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புனிதர்களின் பெருவிழாத் திருப்பலியில், மறையுரையாற்றினார்.

ஜூன் 29, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, உரோம் நகரின் பாதுகாவலர்களான, புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா திருப்பலியை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், தலைமையேற்று நிறைவேற்றி, 31 பேராயர்களுக்கு பால்யங்களை அர்ச்சித்து அணிவித்த , திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு புனிதர்களின் சாட்சிய வாழ்வு பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

இந்தப் புனிதர்களின் வாழ்வு, தவறுகளின்றி அமையவில்லை, ஏனெனில் ஒருவர் கிறிஸ்துவைத் தெரியாது என, மூன்று முறை மறுதலித்தார், மற்றவர், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார், இவர்களின் வாழ்வு, சிறந்த பாடம் ஒன்றை நமக்குப் போதிக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவ வாழ்வின் தொடக்கம், நம் தகுதியைப் பார்த்து அமைவதில்லை என்பதை, இது எடுத்துரைக்கின்றது என்றும், கூறினார்.

நம்மை, மற்றவரைவிட சிறந்தவர்கள் என்று கருதும்போது, அது முடிவின் தொடக்கமாக அமைகின்றது எனவும், தங்களை நீதிமான்களாகக் கருதுபவர்களுடன் அல்ல, மாறாக, தேவைப்படுகின்றவர்கள் என்று கருதுகின்றவர்களோடு, ஆண்டவர், புதுமைகளை ஆற்றுகின்றார் என்றும், திருத்தந்தை கூறினார். 

தாழ்ச்சி

புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகிய இருவரும், தங்களின் வாழ்வு முழுவதும் தாழ்மை என்ற பண்பைக் கடைப்பிடித்தனர் என்றும், புனிதத்துவம் என்பது, தன்னை உயர்த்துவதில் அல்ல, மாறாக, தாழ்த்திக்கொள்வதில் அடங்கியுள்ளது என்பதை, இருவரும் புரிந்து வைத்திருந்தனர் என்றும், புனிதத்துவம் என்பது போட்டியிடுவது அல்ல, ஆனால், ஒவ்வொரு நாளும், தனது ஏழ்மை நிலையை, தன்னைத் தாழ்த்துகின்றவர்களை உயர்த்துகின்ற ஆண்டவரிடம் அர்ப்பணிப்பதாகும் என்றும், திருத்தந்தை மறையுரையாற்றினார்.

மன்னிப்பு

புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகிய இருவரின் பலவீனங்களுக்கு மத்தியில் அவர்களைக் காத்து வந்த இரகசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, ஆண்டவரின் மன்னிப்பே, அந்த இரகசியம் என்றார். 

இவ்விரு புனிதர்களும், தங்களின் தவறுகளில், ஆண்டவரின் வல்லமைமிகு இரக்கத்தைச் சந்தித்தனர், அதுவே, அவர்களுக்கு மறுபிறப்பை அளித்தது, ஆண்டவரின் மன்னிப்பில், எதனாலும் ஈடுகட்ட முடியாத அமைதி மற்றும் மகிழ்வை, அவர்கள் அனுபவித்தனர் என்றுரைத்த திருத்தந்தை, இறுதியில், புனிதர்கள் பேதுரு, பவுல், இயேசுவுக்குச் சாட்சிகளாக விளங்கினர் என்று கூறினார்

இயேசுவுக்குச் சாட்சிகள்

இயேசுவுக்குச் சாட்சிகளாக இருப்பவர்களுக்கு, அவர் வரலாற்று மனிதரைவிட பெரியவராக, வாழும் மனிதராக, புதுமையான மனிதராக இருக்கின்றார், நாம் ஏற்கனவே பார்த்தவைகள் அல்ல, மாறாக, வருங்காலத்தின் புதினமாக விளங்குகிறார் என்றுரைத்த திருத்தந்தை, இயேசு, கடந்தகால வரலாறு பற்றி அக்கறை கொள்வதில்லை, மதத்தின் பதிப்பாசிரியர்களை, முதல் பக்கத்தில்வரும் கிறிஸ்தவர்களை நோக்குவதில்லை, மாறாக, ஆண்டவரே, நீரே எனது வாழ்வு என, ஒவ்வொரு நாளும் சொல்லும், சாட்சிய வாழ்வு வாழ்பவர்களைத் தேடுகிறார் என்றார். 

இயேசுவைச் சந்தித்து, அவரின் மன்னிப்பை அனுபவித்த திருத்தூதர்கள், புதிய வாழ்வு வாழந்து அவருக்குச் சான்று பகர்ந்தனர், தங்கள் வாழ்வை முழுவதுமாகக் கையளித்தனர் என்று மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெதுவெதுப்பான கிறிஸ்தவர்களாக வாழாமல் இருப்போம், இயேசுவோடு ஒவ்வொரு நாளும் கொள்ளும் உறவு மற்றும் அவரின் மன்னிப்பின் வல்லமை வழியாக, உண்மையிலேயே நாம் யார் என்பதை அறிந்துகொள்ள ஆண்டவரிடம் வரம் கேட்போம் என்று கூறினார்.

பால்யம்

மறையுரையின் இறுதியில் பால்யத்தின் முக்கியத்துவம் பற்றியும் உரைத்த திருத்தந்தை, இத்திருப்பலியில் பங்குபெற்ற, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தையின் பிரதிநிதிகள் குழுவையும் வாழ்த்தினார். விசுவாசிகள் மத்தியில் முழு ஒன்றிப்பை நோக்கிய பயணத்தில், காலம்தாழ்த்தாமல், முழுமையாக ஈடுபட, இக்குழுவின் பிரசன்னம் நினைவுபடுத்துகின்றது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

29 June 2019, 12:00