தேடுதல்

Vatican News
Rom சமுதாய மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் உரை வழங்குதல் Rom சமுதாய மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் உரை வழங்குதல் 

Rom சமுதாய மக்களுக்கு திருத்தந்தையின் உரை

இயேசுவின் பாதையை தேர்வு செய்வோம். அது சிரமங்கள் நிறைந்த பாதை, ஆனால் அமைதியைக் கொணரும் பாதை. இந்த பாதை, மன்னிப்பின் ஊடாகச் செல்வது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன், உங்கள் வரவேற்பிற்கு என் நன்றியை வெளியிடுகிறேன். இறைவனின் திருஅவையில் அனைவருக்கும் இடம் உள்ளது. அது ஒரு சந்திப்பின் இடம். இது வெறும் வார்த்தையல்ல, மாறாக, கிறிஸ்தவர்களின் தனி அடையாளம். நட்புணர்விலும், பகிர்விலும், ஒவ்வொருவரையும் சந்திக்க ஆவல் கொள்ளும் இறைவனின் ஆர்வத்தை, தன் நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய மறைசாட்சி, ஆயர் Ioan Suciu அவர்களை நினைவுகூர்கிறோம்.

Rom சமுதாயத்திடம் மன்னிப்பு

Rom சமுதாயங்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது, ஏனையோரிடமிருந்து பிரித்து வைக்கப்படுவது, தவறாக நடத்தப்படுவது போன்றவற்றை அறியும்போது, மனம் கனக்கிறது, வேதனையடைகிறது. கத்தோலிக்கர்கள் உட்பட கிறிஸ்தவர்களும் இந்த தவறைச் செய்துள்ளனர். அதற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். மனித வரலாற்றில், எப்போதும், காயீனும், ஆபேலும் இருந்துள்ளனர். காயீனுக்கு ஆபேல் மீது அக்கறையில்லை. மற்றவர் மீது காட்டப்படும் அக்கறையற்ற மனநிலை,, முன்சார்பு எண்ணங்களை வளர்க்கவும், கோபத்தையும், வெறுப்பையும் சீராட்டவுமே உதவுகிறது. நாம் எத்தனையோ முறை மற்றவர்களைப் பற்றி தவறான தீர்ப்புக்களை முன் வைத்து, அதனால் பகைமையையும், பிரிவினைகளையும் விதைத்துள்ளோம்? எவரையும் பின்னுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, மனித குலம், முன்னோக்கி நடைபோட முடியாது என்பதை உணர்வோம். முற்சார்பு எண்ணங்களின்றி, மற்றவர்களை நாம் பார்க்கத் தவறும்போது, நாம் கிறிஸ்தவர்களாக, ஏன், மனிதராகவே இருக்கமுடியாது.

அன்பின் கலாச்சாரமும், பகைமையின் கலாச்சாரமும்

இவ்வுலகில், உரையாடலுக்கு திறந்த கதவும், மோதல்களுக்கு மூடிய கதவும்  உள்ளன. ஏற்புடைமையும் உள்ளது, மறுத்து ஒதுக்குவதும் உள்ளது. மற்றவர்களை சகோதரர்களாக, சகோதரிகளாகக் காண்போரும் உள்ளனர், தங்கள் பாதையில் அவர்களை தடைக்கற்களாக காண்போரும் உள்ளனர். அன்பின் கலாச்சாரமும் உள்ளது, பகைமையின் கலாச்சாரமும் உள்ளது. குறுக்குச் சாலைகளின் சந்திப்பில் நிற்கும் நமக்கு ஒப்புரவின் பாதையா, பழிவாங்கலின் பாதையா, என்ற குழப்பம் நீடிக்கிறது. எதைத் தேர்வுச் செய்வது? காயீனின் பாதையா, ஆபேலின் பாதையா? ஆனால், நாம் இயேசுவின் பாதையை தேர்வு செய்வோம். இது சிரமங்கள் நிறைந்த  பாதை, ஆனால் இதுவே அமைதியைக் கொணரும் பாதை. இந்த பாதை, மன்னிப்பின் ஊடாகச் செல்வது. பகைமைக்கு இதயத்தில் இடம் கொடாதிருப்போம். ஒரு தீமையால் இன்னொரு தீமையை வெற்றிகொள்ளமுடியாது. பழிவாங்குதல் வழியாக, அநீதியை சீர்செய்யமுடியாது, வெறுப்புணர்வுகள் இதயத்திற்கு இதமானவையல்ல.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, நீங்கள் ஆற்றவேண்டிய பங்கும் உள்ளது. உங்களிடம் இருக்கும் தனிப்பட்ட கொடைகளை மற்றவர்களுடன் பகிர்வதற்கு அஞ்சாதீர்கள். கூட்டுக்குடும்பம், ஒப்புரவு, இன்முக வரவேற்பு, உதவும் மனப்பான்மை, உங்கள் சமூகத்தில் கடைநிலையில் இருப்போர் மீது காட்டும் அக்கறை,   முதியோர் மீது மரியாதை, வாழ்வில் மகிழ்வு போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் நல்லவற்றைப் பகிரும் அதே நேரத்தில், மற்றவர்களிடம் இருந்து நல்லவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். பிரிக்கும் சுவர்களை தகர்க்கவும், ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படவும், சந்தேகங்களையும், அச்சங்களையும், வென்று, மேலும் மனிதாபிமானமிக்க ஓர் உலகை கட்டியெழுப்பவும், ஒன்றிணைந்து உழைப்போமாக..

ஒரு திருப்பயணியாகவும், ஒரு சகோதரனாகவும் இந்த அழகிய நாட்டு மக்களை சந்திக்க வந்த நான், பல்வேறு அனுபவங்களுடன் திரும்பிச் செல்கிறேன்.  என் நினைவுகளுக்கு வண்ணம் தீட்டும். உங்களுக்கு நன்றி கூறி, உங்களைக் குறித்த நினைவுகளை என்னோடு எடுத்துச்செல்கிறேன். உங்களுக்கு ஆசீர் வழங்குவதற்கு முன்னால், உங்களிடம் ஒரு விண்ணப்பத்தை முன் வைக்கிறேன். எனக்காக செபிக்க மறவாதீர்கள்.

02 June 2019, 14:35