தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ்  திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

புது வாழ்வுக்கு பிறக்கவேண்டும் என்பதே உயிர்ப்பு தரும் செய்தி

நம்முடைய குறைபாடுகள், மடிதல்கள் ஆகியவற்றிலிருந்து நாம் மீண்டும் எழுவதற்கு, தூய ஆவியாரே உதவுகிறார், ஏனெனில், நம் வாழ்விலும் நம் ஆன்மாக்களிலும் பல காயங்களும் தோல்விகளும் உள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே 26, இஞ்ஞாயிறன்று, புர்கினா பாசோ நாட்டில், ஞாயிறு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"இன்றும் எத்தனையோ கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் அன்புக்காக துன்புறுத்தப்பட்டும், கொல்லப்பட்டும் வருகின்றனர். அவர்கள், தங்கள் உயிர்களை அமைதியில் வழங்குகின்றனர், ஏனெனில், அவர்களின் மறைசாட்சிய மரணம், செய்தியாகும் தகுதி பெறுவதில்லை. துவக்க நூற்றாண்டில் இறந்த மறைசாட்சிகளின் எண்ணிக்கையை விட இன்று கிறிஸ்தவ மறைசாட்சிகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது" என்ற வேதனையான சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் பதிவாகியிருந்தன.

புர்கினா பாசோ நாட்டின் தலைநகர் Ouahigouyaவில், ஞாயிறு வழிபாட்டில் கலந்துகொண்டிருந்த Toulfe கிறிஸ்தவ சமுதாயத்தின் மீது ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்று, Ouahigouya ஆயர், Justin Kientega அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'நம்முடைய குறைபாடுகள், மடிதல்கள் ஆகியவற்றிலிருந்து நாம் மீண்டும் எழுவதற்கு, தூய ஆவியாரே உதவுகிறார், ஏனெனில், நம் வாழ்விலும், நம் ஆன்மாக்களிலும், பல காயங்களும், தோல்விகளும் உள்ளன. புது வாழ்வுக்கு பிறக்கவேண்டும் என்பதே, உயிர்ப்பு தரும் செய்தி'  என்ற சொற்களைப் பதிவு செய்திருந்தார்.

இதற்கிடையே, தங்கள் 'அத் லிமினா'  சந்திப்பையொட்டி, பிலிப்பீன்ஸ் நாட்டிலிருந்து, உரோம் நகர் வந்துள்ள ஆயர்களின் இரண்டாவது குழுவை, இத்திங்கள் காலை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

27 May 2019, 15:24