தேடுதல்

Vatican News
Rakovsky புனித மிக்கேல் தலைமை தூதர் ஆலயத்தில் திருத்தந்தை Rakovsky புனித மிக்கேல் தலைமை தூதர் ஆலயத்தில் திருத்தந்தை  (Vatican Media)

Rakovsky புனித மிக்கேல் தலைமை தூதர் ஆலயத்தில் திருத்தந்தை

1928ம் ஆண்டில் கடுமையான நிலநடுக்கத்தால் சேதமடைந்த, Rakovsky புனித மிக்கேல் தலைமைத் தூதர் ஆலயம், அப்போதைய பல்கேரிய அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி, புனித திருத்தந்தை 23ம் ஜான் மற்றும், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களின் உதவியுடன், மீண்டும் சீரமைக்கப்பட்டது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இத்திங்கள் உள்ளூர் நேரம் பிற்பகல் 3.20 மணிக்கு, Rakovsky புனித மிக்கேல் தலைமைத் தூதர் ஆலயம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 1928ம் ஆண்டில் கடுமையான நிலநடுக்கத்தால் சேதமடைந்த இந்த ஆலயம், அப்போதைய பல்கேரிய அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி, புனித திருத்தந்தை 23ம் ஜான், திருத்தந்தை 11ம் பயஸ் ஆகியோரின் உதவியுடன், மீண்டும் சீரமைக்கப்பட்டு, 1931ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி அர்ச்சிக்கப்பட்டது. அவ்வாலயத்தில் கூடியிருந்த கத்தோலிக்க சமுதாயத்தைச் சந்திக்கச் சென்றார் திருத்தந்தை. அவர் திறந்த காரில் சாலையில் சென்றபோது மக்கள் இருபக்கங்களிலும், வத்திக்கான் கொடிகளுடன் நின்றுகொண்டு திருத்தந்தையை வாழ்த்தினர். மஞ்சள் மற்றும் வெண்மை நிற பலூன்களையும் பறக்கவிட்டனர். ஆலயத்திற்கு வந்த திருத்தந்தையை, ஒரு சிறுமி மஞ்சள்நிற ரோஜா மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், திருத்தந்தை, ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் உருவப்படம், அவரின் திருப்பண்டம் ஆகியவற்றின்முன் சிறிதுநேரம் செபித்தார். பின்னர், அவர் ஆலயப் பீடத்திற்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். Rakovsky புனித மிக்கேல் தலைமைத் தூதர் ஆலயச் சந்திப்பில், திருநற்கருணை சபையின் ஓர் அருள்சகோதரி, ஓர் அருள்பணியாளர், ஒரு குடும்பம் ஆகியோர் தங்கள் சாட்சியங்களை வழங்கினர். ஒவ்வொரு சாட்சியமும் முடிந்த பின்னர் பாடல்களும், நடனமும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் உரையாற்றத் தொடங்குவதற்கு முன்னர், இந்நாளில் தனது பிறந்த நாளைச் சிறப்பித்த, Sofia மற்றும் Plovdiv ஆயர் Gheorghi Ivanov Jovcev அவர்களை வாழ்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ். அனைவரையும் ஆசீர்வதித்து, Rakovsky புனித மிக்கேல் தலைமைத் தூதர் ஆலயத்திலிருந்து திருத்தந்தை வெளியே வந்தபோது, சில தன்னார்வலர்கள், நோயாளிகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அவர்களையும் திருத்தந்தை ஆசீர்வதித்தார். அந்நேரத்தில் ஆலய மணிகள் ஒலித்துக்கொண்டிருந்தன. இந்நிகழ்வை நிறைவுசெய்து, Plovdiv நகர் விமானத்தளம் சென்று சோஃபியாவுக்குப் புறப்பட்டார்.

பல்கேரிய பல்சமயப் பிரதிநிதிகள் சந்திப்பு

இத்திங்கள் மாலை 6.15 மணிக்கு, பல்கேரிய பல்சமயப் பிரதிநிதிகளுடன் அமைதிக்கான நிகழ்வை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார். இத்துடன் பல்கேரியாவில் இரண்டாவது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் முடிவடையும். மே 7 இச்செவ்வாய் காலையில் வட மாசிடோனியாவுக்குச் செல்லும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று இரவு 8.30 மணிக்கு உரோம் வந்தடைவார். இத்துடன் திருத்தந்தையின் 29வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவு பெறும்.   

ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக ஏழை நாடான பல்கேரியாவில், இளையோர் எண்ணிக்கை குறைந்து வருகின்றது, படித்தவர்கள் வேலை தேடி வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர். இந்நிலையில், 2015ம் ஆண்டில் ஏறத்தாழ இருபதாயிரம் பேர் பல்கேரியாவில் புகலிடம் தேடினர் என, அரசு அறிவித்துள்ளது. ஆயினும், புகலிடம் தேடுவோரை, குறிப்பாக, பெற்றோரின்றி தனியாக வரும் சிறாரை, பல்கேரியா நடத்தும் முறை குறித்து மனித உரிமை குழுக்களும், ஐரோப்பிய அவையும் குறை கூறியுள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த திருத்தூதுப் பயணத்தில், விசுவாசம், அமைதி மற்றும், நல்லிணக்கத்திற்கு விடுக்கின்ற அழைப்பு, அந்நாட்டினரைச் சென்றடையும் என நம்புவோம்.

06 May 2019, 15:41