தேடுதல்

Vatican News
Rakovskyவில் புதுநன்மை வழங்கும் திருப்பலி Rakovskyவில் புதுநன்மை வழங்கும் திருப்பலி  (Vatican Media)

Rakovskyயில் முதல் நற்கருணை வழங்கும் திருப்பலி

அன்புச் சிறாரே, இப்போது இயேசுவைப் பெறவிருக்கிறீர்கள். கவனத்தைச் சிதறவிடாமல், வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், இயேசுவைப் பற்றி மட்டும் நினைவில் வையுங்கள் - திருத்தந்தை

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பல்கேரியாவின் தெற்கேயுள்ள Plovdiv நகரம், பால்கன் பகுதியில், தொழிற்சாலை, வர்த்தகம், அறிவியல் மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய இடமாகும். பல்கேரியாவின் இரண்டாவது பெரிய நகரமாகிய Plovdivவை, இத்திங்கள் காலை 10.10 மணிக்குச் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Rakovsky தூய இயேசுவின் திருஇதய ஆலயத்திற்குச் சென்றார். அவ்வாலயத்தில், முதல் நற்கருணை வாங்கும் 245 சிறாரும், அவர்களின் உறவினர்களும் அமர்ந்திருந்தனர். ஆலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியை, பெரிய திரை வழியாகப் பார்த்து, அதில் பங்குபெற, ஆலய வளாகத்தில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர். அவர்கள் மத்தியில் திறந்த காரில் வந்த திருத்தந்தை, ஆலயம் சென்று திருப்பலியைத் தொடங்கினார். ஆலயத்தில் 700 விசுவாசிகளும், ஆலய வளாகத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் விசுவாசிகளும் இத்திருப்பலியில் பங்கு கொண்டனர். இத்திருப்பலியில், திருத்தந்தை மறையுரையாற்றினார். இம்மறையுரையின் இறுதியில், முதல் நற்கருணை வாங்கவிருக்கும் சிறாருக்கென சுருக்கமாய் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதல் நற்கருணை வாங்கவிருக்கும் சிறாருக்கு

அன்புச் சிறாரே, இப்போது இயேசுவைப் பெறவிருக்கிறீர்கள். கவனத்தைச் சிதறவிடாமல்,  வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், இயேசுவைப் பற்றி மட்டும் நினைவில் வையுங்கள். பீடத்திற்கு அமைதியாக வந்து இயேசுவைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் இயேசு முதல்முறையாக வருவதை, அமைதியாக நினைத்துப் பாருங்கள். பிற்பாடு, அவர் பல தடவைகள் உங்களிடம் வருவார். உங்கள் பெற்றோரை, மறைக்கல்வி ஆசிரியர்களை, தாத்தா பாட்டிகளை, நண்பர்களை, நினைத்துப் பாருங்கள். நீங்கள் யாருடனாவது சண்டை போட்டிருந்தால், இயேசுவைப் பெறுவதற்கு முன்னர் மன்னியுங்கள். அமைதியில் இசுவை அணுகுங்கள். இவ்வாறு புதுமன்மை வாங்கவிருக்கும் சிறாரிடம் திருத்தந்தை கூறினார். இத்திருப்பலியில், அச்சிறாருக்கு நன்மை வழங்கினார் திருத்தந்தை. திருப்பலியின் இறுதியில், Nicopoli ஆயர் Jordanov Christov அவர்களுக்கு திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். அது முடிந்ததும், எல்லாரும் எழுந்து நின்று கைதட்டினர். இத்திருப்பலியை நிறைவுசெய்து, களைப்பின்றி, மலர்ந்த முகத்துடன், திருத்தந்தை ஆலயத்தின் நடுப்பகுதி வழியாகச் சென்றபோது மேலிருந்து வெண்மை நிற மலர்கள் தூவப்பட்டன. புதுநன்மைச் சிறாரும் மகிழ்வோடு கைதட்டிக்கொண்டே இருந்தனர். இத்திருப்பலிக்குப் பின்னர், அந்த ஆலயத்திற்கு அருகிலுள்ள பிரான்சிஸ்கன் அருள்சகோதரிகள் இல்லத்தில், பல்கேரிய ஆயர்களுடன் மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

06 May 2019, 15:48