தேடுதல்

Vatican News
அன்னை மரியிடம் செபிக்கும் திருத்தந்தை அன்னை மரியிடம் செபிக்கும் திருத்தந்தை  (ANSA)

ஆப்ரிக்காவின் ஒற்றுமைக்காக செபிக்க திருத்தந்தை அழைப்பு

ஆப்ரிக்கத் தலத்திருஅவை உறுப்பினர்களிடம் விளங்கும் அர்ப்பணம், அம்மக்களின் ஒற்றுமைக்கு விதையாகவும், ஆப்ரிக்கக் கண்டத்திற்கு நம்பிக்கையாகவும் விளங்க இம்மாதம் செபிப்போம் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்காவில் அமைந்துள்ள தலத்திருஅவை, ஒற்றுமையின் விதையாக விளங்கவேண்டும் என்பதை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மே மாத செபக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆப்ரிக்காவில் நிலவும் இன, மொழி மற்றும் பழங்குடியின வேறுபாடுகளை வெல்வதற்கு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை வளர்க்கவேண்டும் என்ற சொற்களுடன், திருத்தந்தை தன் செபக்கருத்தை ஆரம்பித்துள்ளார்.

திருத்தந்தையின் செபக்கருத்து

ஆப்ரிக்காவில் வாழும் பல்வேறு பிரிவுகளுக்கிடையே, உரையாடலையும், ஒப்புரவையும் உருவாக்க உழைத்துவரும் அருள்சகோதரிகள், அருள்பணியாளர்கள், பொதுநிலையினர் மற்றும் மறைபரப்புப் பணியாளர்கள் அனைவருக்கும் தான் நன்றி கூறுவதாக திருத்தந்தை கூறியுள்ளார்.

ஆப்ரிக்கத் தலத்திருஅவையின் உறுப்பினர்களிடம் விளங்கும் அர்ப்பணம், அம்மக்களின் ஒற்றுமைக்கு விதையாகவும், ஆப்ரிக்கக் கண்டத்திற்கு நம்பிக்கையாகவும் விளங்க இம்மாதம் செபிப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செபக்கருத்தை நிறைவு செய்துள்ளார்.

The Pope Video காணொளி

மே 2, இவ்வியாழன் மாலை வெளியான The Pope Video என்ற காணொளியில், திருத்தந்தை, இம்மாதத்திற்குரிய செபக்கருத்தை இஸ்பானிய மொழியில் விளக்கிக் கூறுவதுபோலவும், அவ்வேளையில், ஆப்ரிக்காவில், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் மறைக்கல்வி ஆசிரியர்கள், மக்களிடையே பணியாற்றுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

17.6 விழுக்காடு கத்தோலிக்கர்

2018ம் ஆண்டில் கத்தோலிக்க உலகைக் குறித்து, வத்திக்கான் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, உலகக் கத்தோலிக்க மக்கள் தொகையில், 17.6 விழுக்காட்டினர், ஆப்ரிக்கக் கண்டத்தில் வாழ்கின்றனர் என்பதை, திருத்தந்தையின் செபக்கருத்துக்களை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுவரும் செபத்தின் திருத்தூதுப்பணி என்ற அமைப்பு கூறியுள்ளது.

இயேசு சபை துறவிகளால், 1844ம் ஆண்டு உருவாக்கப்பட்ட செபத்தின் திருத்தூதுப்பணி என்ற அமைப்பு, தற்போது, 98 நாடுகளில், 3 கோடியே, 50 இலட்சம் கத்தோலிக்கர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.

மேலும், மே 1ம் தேதி, இப்புதனன்று, ஜப்பான் நாட்டின் மன்னராகப் பொறுப்பேற்ற நருஹிட்டோ (Naruhito) அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துத் தந்தியில், மன்னருக்கு ஞானமும், திறமையும் கிடைக்க தான் செபிப்பதாகக் கூறியுள்ளார்.

02 May 2019, 14:44