தேடுதல்

Vatican News
அரசுத் தலைவரின் வரவேற்புரை அரசுத் தலைவரின் வரவேற்புரை 

ருமேனிய அரசுத்தலைவர் Iohannis வரவேற்புரை

உலகினர் அனைவருக்கும், இறைவனின் அன்னையின் ஒரு தோட்டத்தை உருவாக்குவதில், திருத்தந்தையோடு சேர்ந்து, ருமேனிய சமுதாயமும் செயல்படும் - ருமேனிய அரசுத்தலைவர்

மேரி தெரேசா - வத்திக்கான்

திருத்தந்தையே, ருமேனிய அரசுத்தலைவர் என்ற முறையில், அனைத்து ருமேனியர்கள் சார்பில், Cotroceni மாளிகையில், தங்களை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.  ருமேனியாவின் பாதுகாவலரான திருத்தூதர் அந்திரேயாவின் பூமியில், சிலநாள்கள் செலவிடவிருக்கின்றீர்கள். புக்காரெஸ்ட், Iaşi, Şumuleu Ciuc மற்றும் Blaj நகரங்களில் தாங்கள் பெரும் வரவேற்பைப் பெறுவீர்கள். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், ருமேனியாவை, “இறைவனின் அன்னையின் தோட்டம்” என அவர் மிக அழகாக அழைத்துச் சென்றார். இன்று நாங்களும், எம் மொழி மற்றும் விசுவாசத்தின் மூலகாரண இடமாகிய உரோம் ஆயரை மகிழ்வுடன் வரவேற்கின்றோம். 1999ம் ஆண்டு ருமேனியாவிற்கு திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், அதன் இறுதியில், மே 9ம் தேதி, நாட்டின் வருங்காலத்தில், உறுதியான நம்பிக்கை வைத்து செய்தி ஒன்றை விட்டுச் சென்றார். ஐரோப்பாவில், மேற்குக்கும், கிழக்குக்கும் இடையே பாலமாக அமைவதற்கு, ருமேனியக் கலாச்சாரத்தின் பங்கு என்னவென்பதை விளக்கினார். நாங்கள் அன்று பெற்ற செய்தி, இன்று, பலன்களைப் பெற்றுள்ளது. ஐரோப்பிய நாளான மே 9ம் தேதி, ஐரோப்பியத் தலைவர்களை எம் நாட்டின் சிபியுவில் வரவேற்றோம். ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதற்கு அது முக்கிய தருணமாக அமைந்தது. ருமேனியர்கள், சர்வாதிகாரத்தின் கடும் துன்பங்களை அனுபவித்தவர்கள். ஆனால் இன்று இம்மக்கள் எவ்வித அச்சமும், தடையுமின்றி, கடவுளைப் புகழ்கின்றனர்.

தூதரக உறவுகள்

மேலும், திருப்பீடத்திற்கும், ருமேனியாவுக்கும் இடையே நிலவும் தூதரக உறவுகள் நல்ல பலன்களைத் தருகின்றன. 2015ம் ஆண்டு மே 15ம் தேதி, இந்த உறவுகளின் 25வது ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில் தங்களைச் சந்தித்து, எம் நாட்டிற்கு அழைப்பு விடுத்தோம்.  திருத்தந்தையே, தாங்கள், மக்கள் மத்தியில் அன்பும், நீதியும் நிறைந்த ஓர் உலகை உருவாக்குவதற்கு, பணியாற்றி வருகிறீர்கள். வறுமை, வன்முறை, குடிபெயர்தல், சுற்றுச்சூழல் பாதிப்பு, நுகர்வுத்தன்மை போன்றவற்றிக்கெதிராய் நடவடிக்கை எடுப்பதற்கு, தங்களது செய்திகள் அழைப்பு விடுக்கின்றன. அமைதியும், மனிதநலமும் நிறைந்த ஓர் உலகை அமைப்பதிலும், அனைவருக்கும், இறைவனின் அன்னையின் ஒரு தோட்டத்தை உருவாக்குவதிலும் தங்களோடு சேர்ந்து, ருமேனிய சமுதாயமும், ஒரு பாலமாகச் செயல்படும். இவற்றை நோக்கி, "நாம் இணைந்து நடைபயில்வோம்.

இவ்வாறு தனது வரவேற்புரையை நிறைவு செய்தார், ருமேனிய அரசுத்தலைவர் Klaus Werner Iohannis.

31 May 2019, 16:09