தேடுதல்

Vatican News
தாக்குதல்களில் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி தாக்குதல்களில் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி  (AFP or licensors)

உண்மை, நன்மை, நீதிக்குப் பணியாற்றும் ஊடகங்கள் தேவை

நல்ல, உண்மையான தகவல்களை வெளியிடுவது, மக்களாட்சியை ஊக்குவிப்பதற்கும், சுதந்திரமான தேர்தல்களுக்கும் உதவுகின்றது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

உண்மை, நன்மை, மற்றும் நீதிக்குப் பணியாற்றுகின்ற சுதந்திரமான ஊடகவியலும்,  சந்திப்புக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவுகின்ற ஊடகவியலும், நமக்குத் தேவைப்படுகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறியுள்ளார் .

மே 03, இவ்வெள்ளியன்று, சுதந்திர ஊடகவியல் உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியில், எத்தகைய ஊடகவியல் நமக்குத் தேவைப்படுகின்றது என்ற, தன் எண்ணங்களைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், ஆசியாவில் ஊடகவியலாளர் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றனர் எனவும், ஊடகவியல் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது எனவும், ஆசிய திருஅவைத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. பொதுச் செயலர்

மேலும், இந்த உலக நாளுக்குச் செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், சுதந்திரமான ஊடகவியல், மனிதர், ஒருவர் ஒருவருக்குக் கடமைப்பட்டவர்கள் என்ற உணர்வில், வளருவதற்கு மூலைக்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்காலத்தில், செய்தி ஊடகங்களில், தவறான தகவல்களும், நம்பிக்கையற்ற செய்திகளும் இடம்பெறுவது அதிகரித்துவரும்வேளை, அமைதி, நீதி, நீடித்த, நிலையான வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளுக்கு, சுதந்திரமான ஊடகவியல் இன்றியமையாதது என்று குறிப்பிட்டுள்ளார்.

நல்ல தகவல்களை வெளியிடுவது, மக்களாட்சியை ஊக்குவிப்பதற்கும், சுதந்திரமான தேர்தல்கள் நடைபெறுவதற்கும் உதவுகின்றது என்றுரைத்துள்ள கூட்டேரெஸ் அவர்கள், உண்மையான தகவல்கள், மக்கள், தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்ட உதவுகின்றன என்றும் கூறியுள்ளார்.

2018ம் ஆண்டில், பணியின்போது, ஏறத்தாழ நூறு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1994ம் ஆண்டுக்கும், கடந்த ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 1,307 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது. (UN)

03 May 2019, 14:57