தேடுதல்

Vatican News
பிரபஞ்சம் அனைத்தும் கடவுள் நம்மீது கொண்டுள்ள எல்லையற்ற அன்பைப்பற்றிப் பேசுகிறது பிரபஞ்சம் அனைத்தும் கடவுள் நம்மீது கொண்டுள்ள எல்லையற்ற அன்பைப்பற்றிப் பேசுகிறது  (AFP or licensors)

உலகில் உருவாகும் ஒவ்வொரு உயிரும் முக்கியம் - திருத்தந்தை

உயிர்களின் பன்முகத்தன்மை உலக நாளையொட்டி, உலகில் உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியில் கூறினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே 22, இப்புதனன்று, உயிர்களின் பன்முகத்தன்மை உலக நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, உலகில் உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தி வழியே பதிவு செய்தார்.

'இறைவா உமக்கேப் புகழ்' திருமடலிலிருந்து...

"படைப்பு ஒவ்வொன்றுக்கும் ஒரு பணி உள்ளது, எதுவும் தேவையற்றது கிடையாது. பிரபஞ்சம் அனைத்தும் கடவுளின் அன்பு மொழியில், அவர் நம்மீது கொண்டுள்ள எல்லையற்ற அன்பைப்பற்றிப் பேசுகிறது: மண், நீர், மலை, ஒவ்வொன்றும், கடவுளின் அணைப்பே" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

தன் டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவு செய்துள்ள சொற்கள், அவர் வெளியிட்ட 'இறைவா உமக்கேப் புகழ்' என்ற திருமடலில் வெளியான சொற்கள் என்பது, குறிப்பிடத்தக்கது.

உயிர்களின் பன்முகத்தன்மை உலக நாள்

உயிர்கள் அனைத்தின் பன்முகத்தன்மையை நாம் காக்கவேண்டும் என்ற கருத்துடன், ஐக்கிய நாடுகள் அவை, மே 22ம் தேதியை, உயிர்களின் பன்முகத்தன்மை உலக நாள் என்று அறிவித்தது.

1992ம் ஆண்டு மே 22ம் தேதி, நைரோபியில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில், அனைத்து உயிரினங்களை காப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற ஓர் ஒப்பந்தம் உருவானதையடுத்து, அந்நாளை, உயிர்களின் பன்முகத்தன்மை உலக நாளாக ஐ.நா. அவை உருவாக்கி, 1993ம் ஆண்டு முதல் கடைபிடித்தது.

2018ம் ஆண்டு, இவ்வுலக நாளின் 25ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்ட வேளையில், "உயிர்களின் பன்முகத்தன்மை செயல்பாடுகளின் 25 ஆண்டுகளைக் கொண்டாட..." என்பது மையக்கருத்தாக அறிவிக்கப்பட்டது.

"நமது உயிர்களின் பன்முகத்தன்மை, நமது உணவு, நமது நலம்" என்பது, 2019ம் ஆண்டு சிறப்பிக்கப்பட்ட உயிர்களின் பன்முகத்தன்மை உலக நாளின் மையக்கருத்தாக அமைந்துள்ளது.

நொபெல் விருது பெற்ற மருத்துவருடன் திருத்தந்தை

மேலும், 2018ம் ஆண்டு உலக அமைதி நொபெல் விருதை பெற்ற Denis Mukwege Mukengere, மற்றும், Nadia Murad என்ற இருவரில், ஆப்ரிக்காவில் மருத்துவப்பணி ஆற்றிவரும் மருத்துவர், Mukengere அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 22, இப்புதனன்று தன் மறைக்கல்வி உரைக்குப் பின்னர் சந்தித்தார்.

22 May 2019, 15:33