தேடுதல்

Vatican News
'அத் லிமினா' சந்திப்பை மேற்கொண்டுள்ள அர்ஜென்டீனா ஆயர்களுடன் 'அத் லிமினா' சந்திப்பை மேற்கொண்டுள்ள அர்ஜென்டீனா ஆயர்களுடன்  (Vatican Media)

இறைவார்த்தையின் வலிமையைக் குறித்து திருத்தந்தை

"கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது" அது, முதிர்ந்த வயதாவதோ, இறப்பதோ இல்லை, மாறாக, என்றென்றும் நிலைத்திருக்கிறது - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவார்த்தையின் வலிமையை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மே 16, இவ்வியாழன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது" (எபிரேயர் 4:12) அது, முதிர்ந்த வயதாவதோ, இறப்பதோ இல்லை, மாறாக, என்றென்றும் நிலைத்திருக்கிறது - என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

'பாலம் அமைப்பவர்' என்ற பொருள்படும் Pontifex என்ற இலத்தீன் சொல்லை, தன் டுவிட்டர் முகவரியாகக் கொண்டு, திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

மே 16, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,979 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 80 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, அவ்வப்போது வெளியிடப்பட்டு வரும் படங்கள் மற்றும் காணொளிகள், இதுவரை 714 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 61 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவரும், பெரூஜியா பேராயருமான கர்தினால் குவால்த்தியேரோ பஸ்ஸெத்தி அவர்களை இவ்வியாழன் காலை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பின்னர், தங்கள் 'அத் லிமினா' சந்திப்பை மேற்கொண்டுள்ள அர்ஜென்டீனா ஆயர்களையும் காலை 10 மணியளவில் சந்தித்தார்.

16 May 2019, 14:57