தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் உரையாடல் திருத்தந்தையுடன் உரையாடல்  (Vatican Media)

“Guido Carli”அறக்கட்டளையின் சமுதாயநலப் பணிக்கு திருத்தந்தை நன்றி

1914ம் ஆண்டு முதல், 1993ம் ஆண்டு வரை வாழ்ந்த இத்தாலியரான Guido Carli அவர்கள், பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் இத்தாலிய வங்கியின் நிர்வாகியாக 15 ஆண்டுகள் பணியாற்றியவர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

“Guido Carli” அறக்கட்டளையின் 12 பிரதிநிதிகளை, மே 03, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயத்தில் பின்தங்கியவர்களின் முன்னேற்றத்திற்காக, இந்த அமைப்பினர் ஆற்றிவருகின்ற நற்பணிகளைப் பாராட்டி, ஊக்குவித்தார்.

Carli அமைப்பினர், கிறிஸ்தவக் கண்ணோட்டத்தின் மனித விழுமியங்களை ஊக்குவிப்பதற்கு ஆற்றும் பணிகள், நற்செய்தி அறிவுறுத்தும் பிறரன்புக் கடமையை நிறைவேற்றுவதாய் உள்ளன என்று உரைத்த திருத்தந்தை, உலகெங்கும், பொதுநலத்தையும், நன்னெறியையும் வளர்ப்பவர்களை, இந்த அமைப்பினர் அங்கீகரித்து கவுரவிப்பதையும் பாராட்டினர்.

உண்மையான மனித நலத்தின் உலகளாவிய அளவுகோலாக அமைந்துள்ள நன்னெறிகளுக்கு ஒத்திணங்கும் வகையில் அமைந்திருக்கும் பொருளாதாரமே, பொது நலனுக்குத் தொண்டாற்றும் என்று கூறியத் திருத்தந்தை, பொருளாதார உலகில் நிலவும் முரண்பாடான நிலைகள் பற்றியும் குறிப்பிட்டார். 

புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த ஓர் அருள்பணியாளர், Carli அவர்களுக்கு நண்பராக இருந்து வழிகாட்டியுள்ளார் என்று கூறியத் திருத்தந்தை, Carli அவர்கள், மிகுந்த கடமையுணர்வோடு, இத்தாலிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் என்று கூறினார்.  

மேலும், ஐரோப்பிய நரம்புஅறுவை சிகிச்சை கழகத் தலைவர், பேராசிரியர் Jesus Lafuente அவர்களையும், பாப்பிறை விவிலியக் கழகத்தின் 21 அங்கத்தினர்களையும், இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

03 May 2019, 14:46