தேடுதல்

Vatican News
திருத்தந்தையை ருமேனியாவில் வரவேற்ற அரசுத் தலைவர் திருத்தந்தையை ருமேனியாவில் வரவேற்ற அரசுத் தலைவர்  (AFP or licensors)

புக்காரெஸ்ட் Cotroceni மாளிகையில் வரவேற்பு

அரசுத்தலைவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட பதக்கத்தில், ருமேனியா நாட்டு வரைபடமும், ருமேனியா, இறைவனின் அன்னையின் தோட்டம் எனப் பொருள்படும் விதத்தில், அதைச் சுற்றிலும், ரோஜா மலர்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன

மேரி தெரேசா - வத்திக்கான்

மே 31, இவ்வெள்ளி உள்ளூர் நேரம் காலை 11.09 மணிக்கு, புக்காரெஸ்ட் நகரின் "Henri Coanda-Otopoeni” பன்னாட்டு விமானத்தளத்தைச் சென்றடைந்த திருத்தந்தையை, ருமேனிய அரசுத்தலைவர் Klaus Werner Iohannis அவர்கள், தனது துணைவியாருடன் வரவேற்றார். மரபு உடைகளில் இரு வளர்இளம் பருவத்தினர், மஞ்சள்நிற ரோஜா மலர்க்கொத்தை திருத்தந்தையிடம் கொடுத்து வரவேற்றனர். சிவப்பு கம்பளத்தில், அரசுத்தலைவருடன் நடந்துவந்தவேளையில், திருஅவை மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை, ஒவ்வொருவராக வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு இரு பக்கங்களிலும், வத்திக்கான் கொடிகளுடன் நின்றுகொண்டிருந்த பொதுமக்களும் திருத்தந்தையை வாழ்த்தினர். திருத்தந்தையும், அரசுத்தலைவரும், விமானத்தளத்திலுள்ள பிரமுகர்கள் அறையில் சிறிதுநேரம் இருந்தபின்னர், அங்கிருந்து 19 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, Cotroceni அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 1888ம் ஆண்டில், அரசர் முதலாம் கரோல் அவர்கள், Cotroceni துறவு இல்லத்தில், இந்த மாளிகையை கட்டி எழுப்பினார். இவ்விடத்தில், திருத்தந்தைக்கு, அதிகாரப்பூர்வ அரசு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அம்மாளிகையில் விருந்தினர் நூலில் கையெழுத்திட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ருமேனியத் திருத்தூதுப்பயணத்திற்கென தயாரிக்கப்பட்ட பதக்கம் ஒன்றை, அரசுத்தலைவருக்கு அன்பளிப்பாக அளித்தார் திருத்தந்தை. அதில் ருமேனியா நாட்டு வரைபடமும், அன்னை மரியாவைக் குறிக்கும் வகையில் ‘M’  என்ற எழுத்தும், அதற்குமேல், வெற்றியைக் குறிக்கும் விதமாக, 12 விண்மீன்கள் கிரீடமும், ருமேனியா, இறைவனின் அன்னையின் தோட்டம் எனப் பொருள்படும் விதத்தில், அப்பதக்கத்தைச் சுற்றிலும், ரோஜா மலர்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த மாளிகையில் அரசுத்தலைவரையும், பிரதமர் Vasilica Viorica Dancila அவர்களையும், தனித்தனி அறைகளில் சந்தித்து கலந்துரையாடினார் திருத்தந்தை. பின்னர், ருமேனியாவின் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சந்திப்பில் முதலில் அரசுத்தலைவர் வரவேற்று உரையாற்றினார். இவ்வுரைக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ருமேனியாவுக்கான தனது முதல் உரையை வழங்கினார். இச்சந்திப்பு முடிந்து, புக்காரெஸ்ட் திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தி சிறிதுநேரம் ஓய்வும் எடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

31 May 2019, 16:03