தேடுதல்

Vatican News
பாப்பிறை விவிலிய நிறுவனத்தினருடன் திருத்தந்தை பாப்பிறை விவிலிய நிறுவனத்தினருடன் திருத்தந்தை  (Vatican Media)

பாப்பிறை விவிலிய நிறுவனத்தினருடன் திருத்தந்தை

திருத்தந்தை புனித 10ம் பயஸ் அவர்கள் உருவாக்கிய பாப்பிறை விவிலிய நிறுவனம், 110ம் ஆண்டைக் கொண்டாடுவதையொட்டி, அந்நிறுவனத்தைச் சார்ந்த அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திரு விவிலியத்தைக் குறித்த சிறப்பான ஆய்வுகள், உரோம் நகரில் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நோக்கத்துடன், திருத்தந்தை, புனித 10ம் பயஸ் அவர்கள் உருவாக்கிய, பாப்பிறை விவிலிய நிறுவனம் தன் 110ம் ஆண்டைக் கொண்டாடும் வேளையில், அந்நிறுவனத்தைச் சார்ந்த அனைவரையும் வாழ்த்துவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

1909ம் ஆண்டு திருத்தந்தை புனித 10ம் பயஸ் அவர்கள் உருவாக்கிய பாப்பிறை விவிலிய நிறுவனத்தைச் சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் என 400க்கும் அதிகமானோரை, மே 9, இவ்வ்வியாழனன்று வத்திக்கான் கிளமெந்தீனா அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை, அவர்களுக்காகத் தயாரித்திருந்த உரையை வழங்காமல், தன் மனம் திறந்து அவர்களோடு சிறிது நேரம் பேசியபின், ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்திப்பதில் தான் அதிக ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

விவிலிய ஆய்வு, எப்போதும் சவால்கள் நிறைந்த ஒரு பணி என்றும், அப்பணியை மேற்கொள்ள, 70 நாடுகளிலிருந்து, பாப்பிறை விவிலிய நிறுவனத்தில் பயிலும் மாணவர்களையும், பல்வேறு நாடுகளிலிருந்து அங்கு வந்து பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையும் தான் பாராட்டுவதாக, தான் தயாரித்திருந்த உரையில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவிலிய நிறுவனத்தின் முன்னாள் அதிபராகப் பணியாற்றிய இயேசு சபை கர்தினால் அகஸ்டின் பேயா (Augustine Bea) அவர்களை சிறப்பாக நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Nostra Aetate என்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு ஏடு உருவாகவும், கிறிஸ்தவ, யூத உரையாடலுக்கும் கர்தினால் பேயா அவர்கள், காரணியாக இருந்தார் என்பதை எடுத்துரைத்தார்.

இந்த 110ம் ஆண்டு நிறைவையொட்டி, 'இயேசுவும் பரிசேயரும்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு, பொதுவாக பரிசேயரைக் குறித்து நாம் கொண்டிருக்கும் குறுகிய கண்ணோட்டத்தை மாற்றியிருக்கும் என்று தான் நம்புவதாக திருத்தந்தை தன் உரையில் கூறியுள்ளார்.

வரலாற்றில் பரிசேயர்களைக் குறித்து கூறப்பட்டுள்ள கருத்துக்கள், விவிலியத்தில், குறிப்பாக, நற்செய்திகளிலும், புனித பவுலின் திருமுகங்களிலும் அவர்களைக் குறித்து கூறப்பட்டுள்ள கருத்துக்கள், ஆகியவற்றின் விளக்கங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்

09 May 2019, 15:35