தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையின்போது......150519 புதன் மறைக்கல்வியுரையின்போது......150519 

மறைக்கல்வியுரை – ’தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்'

நாம் எவ்வளவுதான் தீமைகளுக்கு உள்ளாக்கப்பட்டாலும், இயேசு நம் துணைக்கு வருவார் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு நம்மில் நிறைவேறுவதைக் காட்டுவதாக ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’என்ற செபம் உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஏப்ரல் மாத இறுதியில் கோடைகாலம் துவங்கியது போன்ற தட்பவெப்ப நிலை தோன்றி, எல்லாம் வழக்கம்போல் சென்றுகொண்டிருப்பது போன்ற மாயையைத் தந்தது இத்தாலிக்கு. ஆனால் மே மாத்தின் இரண்டாவது வாரத்தில், வழக்கத்திகு மாறாக, குளிர் காற்று மீண்டும் வீசத் துவங்கியது.  எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு மே மாதத்தில், குளிர் காற்றும், அவ்வப்போது மழையும் பெய்துகொண்டிருக்கிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் புதன் பொது மறைக்கல்வியுரையை வழங்க, திறந்த காரில் நின்றுகொண்டே வந்தபோது, அவருடன் அந்த வண்டியில் எட்டு சிறார்களையும் ஏற்றிக்கொண்டார். சிரியா, நைஜீரியா, மற்றும் காங்கோவைச் சேர்ந்த இந்த சிறார்கள், லிபியாவிலிருந்து மனிதாபிமான உதவிக் குழுக்களால் உரோம் இத்தாலிக்குக் கொணரப்பட்டு, உரோம் நகருக்கு அருகே Rocca di Papa எனுமிடத்தில் தங்கள் குடும்பங்களோடு மனிதாபிமான மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பேதுரு வளாக மக்களிடையே ஒரு வலம் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு தம் சீடர்களுக்குக் கற்பித்த, ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என்ற செபம் குறித்து உரை வழங்கினார். பல வாரங்களாக தன் புதன் மறைக்கலவி உரையில் இச்செபம் குறித்தே விளக்கமளித்து வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வாரத் துவக்கத்தில் தான் மேற்கொண்ட பல்கேரியா, மற்றும், வட மாசிடோனியா நாடுகளுக்கான திருத்தூதுப் பயணம் குறித்து, கடந்த புதனன்று தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இவ்வாரம் மீண்டும், இயேசு கற்பித்த செபம் குறித்த தன் கருத்துக்களைத் தொடர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள், ’தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்’ என்ற அச்செபத்தின் இறுதி விண்ணப்பம் குறித்து உரையாடினார்.

அன்பு சகோதரர் சகோதரிகளே, ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என்ற செபம் குறித்த நம் தொடர் மறைக்கல்வியுரையில் இன்று, ’தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்’ என்ற அச்செபத்தின் இறுதி விண்ணப்பம் குறித்து நோக்குவோம். வாழ்வு என்பது சிரமங்களுடன் சுமையேற்றப்பட்டதாக உள்ளது. நமது வாழ்வு முழுவதும் தீயோனின் பிரசன்னம் இருந்து கொண்டே இருக்கிறது. ஆகவே,  ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என்ற செபத்தின் இந்த இறுதி விண்ணப்பம், அனைத்துத் தீமைகளையும், வல்லமையுடன் எதிர்கொள்கின்றது. இயேசுவும் தம் பாடுகளின்போது, தீயோனின் தாக்கத்தை முழுமையாக அனுபவித்தார். மரணம் மட்டுமல்ல, மாறாக, சிலுவை மரணத்தையும், தனிமையை மட்டுமல்ல இகழ்ச்சியையும், அவருக்கு எதிரான தீய எண்ணங்களை மட்டுமல்ல, கொடூர நிலைகளையும் அனுபவித்தார். நாம் எவ்வளவுதான் தீமைகளுக்கு உள்ளாக்கப்பட்டாலும், இயேசு நம் துணைக்கு வருவார் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு நம்மில் நிறைவேறுவதைக் காட்டுவதாக இந்த செபம் உள்ளது. “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என சிலுவையில் இயேசு தந்தையிடம் வேண்டியது, விலைமதிப்பற்ற மூதாதையர் வழிமரபுச் செல்வத்தை நமக்கு வழங்குவதாக உள்ளது. அதாவது, அனைத்துத் தீமைகளில் இருந்தும் நம்மை விடுவிக்கும் இறைமகனின் பிரசன்னத்தை நமக்கு காட்டி நிற்கின்றது. இங்கிருந்துதான் அமைதி எனும் அவரின் கொடை வழிந்தோடுகிறது. இது அனைத்துத் தீமைகளையும்விட வலிமை நிறைந்தது மற்றும், இங்குதான் நம் நம்பிக்கையும் இருக்கிறது.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த திருப்பயணிகளுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பாப்பிறை நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடும்பம் குறித்த கருத்தரங்கில் பங்குபெற்ற பல்கலைக்கழக மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் வாழ்த்தினார். பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2019, 15:29