தேடுதல்

Vatican News
பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் திருஅவை தலைவர்களுடன் திருத்தந்தை பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் திருஅவை தலைவர்களுடன் திருத்தந்தை 

பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் சபையினருக்கு திருத்தந்தையின் உரை

பல்கேரியாவில் தங்கியிருந்த புனித 23ம் ஜான் அவர்களின் அடிச்சுவடுகளைத் தொடர்ந்து, என் பயணம், அமைந்துள்ளது. இந்நாட்டு மக்களின் நேர்மை, கடின உழைப்பு, மற்றும், போராட்டங்களின் நடுவே அவர்களிடம் விளங்கிய மாண்பு ஆகியவற்றை, புனித 23ம் ஜான் அவர்கள் மிகவும் பாராட்டினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையே, ஆயர்களே, அன்பு சகோதரர்களே, "புனித தோமா ஞாயிறு" என்று, கிழக்கு கிறிஸ்தவ சமுதாயத்தில் அறியப்படும் இந்த ஞாயிறன்று, உங்கள் அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களை வழங்குகிறேன்.

கிறிஸ்தவர்களிடையே உருவான காயங்கள்

கிறிஸ்துவின் காயங்களைத் தொட்டு, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" (யோவான் 20:28) என்று கூறிய திருத்தூதர் தோமாவைச் சிந்திப்போம். வரலாற்றில், கிறிஸ்தவர்களாகிய நம்மிடையே உருவான காயங்கள், கிறிஸ்துவின் மறையுடலான திருஅவையில் வேதனை மிகுந்த காயங்களாக நீடிக்கின்றன. இருப்பினும், நாம் அனைவரும் இக்காயங்களைத் தொட்டு, இறைவன் உயிர்த்தார் என்றும், அவரே நம் ஆண்டவரும், கடவுளும் என்றும் அறிக்கையிடுவோம். இவ்வாறு, நாம் மன்னிப்பின் மகிழ்வை மீண்டும் கண்டுணர்ந்து, ஒரே பீடத்தில், பாஸ்கா மறைபொருளை கொண்டாட இயலும்.

கிறிஸ்துவுக்காக, கடந்த நூற்றாண்டில் துன்பங்களைத் தாங்கிய பல கிறிஸ்தவர்கள் இந்நாட்டில் உள்ளனர். அவர்கள் சிந்திய இரத்தம் கிறிஸ்தவ ஒன்றிப்பின் இரத்தம்! இன்றும், இவ்வுலகில் எத்தனையோ சகோதரர்களும், சகோதரிகளும் தங்கள் மத நம்பிக்கைக்காக துன்பங்களை அடைகின்றனர்.

புனித 2ம் ஜான்பால், புனித 23ம் ஜான்

உரோமைய ஆயரான புனித 2ம் ஜான்பால் அவர்கள், பல்கேரியாவுக்கு முதல் முறையாக வந்து, முதுபெரும் தந்தை மாக்சிம் அவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, இந்த சந்திப்பு நிகழவேண்டும் என்பதை நான் மிகவும் விரும்பினேன். இந்த என் பயணம், இந்நாட்டில் தங்கியிருந்த புனித 23ம் ஜான் அவர்களின் அடிச்சுவடுகளைத் தொடர்கிறது. இந்நாட்டு மக்களின் நேர்மை, கடின உழைப்பு, மற்றும், போராட்டங்களின் நடுவே அவர்களிடம் விளங்கிய மாண்பு ஆகியவற்றை, புனித 23ம் ஜான் அவர்கள் மிகவும் பாராட்டினார். அவர் துவங்கிய 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் கலந்துகொள்ள, பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் திருஅவைக்கு விடுத்த அழைப்பை ஏற்று, ஒரு சில பிரதிநிதிகள் அதில் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து, பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் சபைக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, உறவுகள் வளர்ந்துள்ளன.

உரையாடல் வழியே நமது உறவு இன்னும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன். நாம் வாழும் இன்றையக் காலத்தில், வறியோருக்கும், புறக்கணிக்கப்பட்டோருக்கும் பணிகள் செய்வதில் நாம் இணைந்து பயணம் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். இந்தப் பயணம், வறியோரின் கிறிஸ்தவ ஒன்றிப்பு பயணம்.

வழிகாட்டிகளான புனிதர்கள், சிரில் மற்றும் மெத்தோடியஸ்

இந்தப் பயணத்தில், புனிதர்கள், சிரில் மற்றும் மெத்தோடியஸ், நமக்கு வழிகாட்டிகளாகவும், உந்து சக்தியாகவும் அமைந்துள்ளனர். மறைபரப்புப் பணியும், ஒன்றிப்பும் இவ்விரு புனிதர்களின் வாழ்வுக்கு அடித்தளமாக அமைந்தன. இவ்விருவரும், விவிலியத்தை சிலாவிய மக்களின் மொழியில், மொழிபெயர்ப்பு செய்தனர். தாங்கள் பிறந்த பைசாந்திய கலாச்சாரத்திற்கு நெருக்கமானவர்களாகவும், அதே வேளையில், கிறிஸ்துவின் செய்தியை அறிவிப்பவர்களாகவும் இவர்கள் விளங்கினர். துணிவுடன் இவர்கள் மேற்கொண்ட இம்முயற்சி, நற்செய்தியைப் பரப்பும் பணிக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

புனிதர்களான சிரில் மற்றும் மெத்தோடியஸ் இருவரிடமும் விளங்கிய ஒன்றிப்பு, மறைபரப்புப்பணி, கலாச்சார நெருக்கம் மற்றும் பறைசாற்றுதல் ஆகிய பண்புகள், ஐரோப்பிய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு அடையாளங்களாக விளங்கின. இவ்விருவரும், ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைத்து வருவதற்கு முன்னோடிகளாக விளங்கினர்.

ஒன்றிப்பையும், சமாதானத்தையும் வளர்ப்போம்

இவ்விருவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நாமும், இயேசுவின் பெயரால் ஒன்றிப்பையும், சமாதானத்தையும் வளர்ப்பவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நம்மிடையே நிலவும் பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரம், மரபுகள் ஆகியவை, நம்மை பிரிப்பதற்குப் பதில், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பக்குவத்தை தரவேண்டும் என்பதை, புனிதர்களான சிரிலும் மெத்தோடியசும் நமக்குச் சொல்லித் தருகின்றனர்.

திருத்தந்தையே, சகோதரர்களே, உங்கள் அனைவருக்கும், இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் என் செபங்களை உறுதியாக்குகிறேன். செபமே அனைத்து நன்மைகளையும் திறந்துவிடும் கதவு என்பதால், உங்கள் செபங்களில், எனக்கும் ஓர் இடம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். கிறிஸ்து உயிர்த்துள்ளார்!

05 May 2019, 11:21